வளைகுடா நாடுகளிடம் இழப்பீடு கோரும் ஈரான்: அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு!

Date:

-லத்தீப் பாரூக்

சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான், ஆகிய நாடுகளிடமிருந்து 270 பில்லியன் அமெரிக்க டொலர்களை, போரினால் ஏற்பட்ட இழப்புக்களுக்கான இழப்பீடாக வழங்குமாறு ஈரான் கோரி உள்ளது.

தனது இறையான்மைக்கு உட்பட்ட பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு உதவியதாகவும், பொதுமக்கள் இலக்குகளுக்கு எதிராக “சட்டவிரோத ஆயுதத் தாக்குதல்களில்” ஈடுபட்டதாகவும் இந்த நாடுகள் மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

2026  ஏப்ரல் 14 திங்கள் அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் மற்றும் ஐ. நா. பாதுகாப்பு சபை தலைவர் ஜமால் ஃபாரஸ் அல்ரோவியே, ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் ஈரானின் ஐ. நா தூதர் அமீர் சயீத் ஐராவனி, இந்த வளைகுடா நாடுகள் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு தேவையான ஆதவை அல்லது வான்வெளியை வழங்கியதாக குற்றம் சாட்டினார்.

போரின் போது ஒரு பெரிய அளவிலான விமானப் படையெடுப்பு நடத்தப்பட்டதன் மூலம் ஈரான் முழுவதும் சுமார் 23,800 தாக்குதல்கள்​ நடத்தப்பட்டன.  அமெரிக்கப் படைகள் சுமார் 13,000 தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) கூறியுள்ளது.

அதே நேரத்தில் இஸ்ரேலிய இராணுவம், ஈரானின் இராணுவ திறன்களை குறிவைத்து சுமார் 10,800 தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியுள்ளது.

ஈரான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நலன்களை குறிவைத்து பதிலடி வழங்கியது. வளைகுடா நாடுகள் மற்றும் ஈராக் மீது ஆயிரக்கணக்கான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களையும் ஈரான் நடத்தியது. பல தாக்குதல்கள் பொதுமக்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புக்களை குறிவைத்தன.

வளைகுடா நாடுகளுக்கு எதிரான “கடுமையான தாக்குதல்களுக்காக” தெஹ்ரானை கண்டித்த ஐ. நா. பாதுகாப்பு  சபையின் தீர்மானம் 2817 ஐ ஈரான் நிராகரித்தது. இது “வெளிப்படையாக நியாயமற்றது” மற்றும் “சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று ஈரான் கூறியுள்ளது.

இதற்கிடையில் பல்லாயிரக்கணக்கான டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ள, ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரின் செலவை, ஈடுகட்டுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அரபு நாடுகளைக் கேட்க வேண்டும் என்று வெள்ளை மாளிகையும் பரிந்துரைத்துள்ளது.

ஆனால் 1990 ஆம் ஆண்டில் வாஷிங்டனின் வளைகுடா போருக்கு அமெரிக்க நட்பு நாடுகள் நிதியளித்தன. அன்று, பிராந்தியத்தில் ஜேர்மனி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட கூட்டணி உறுப்பினர்கள் அமெரிக்க நடவடிக்கைக்கு 54 பில்லியன் டாலர்களை (இன்று 134 பில்லியன் டாலருக்கு சமம்) திரட்டினர்.

ஈரான் தனது தாக்குதல்களை பல நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தவில்லை; அது விமான நிலையங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தளங்களையும் குறிவைத்தது. அதைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பு என்பனவும் தாக்குதல் இலக்குகளாக அமைந்தன.

சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, மத்திய கிழக்கில் உள்ள முக்கிய அமெரிக்க இராணுவத் தளங்களின், இருப்பிடம், விநியோக தளம் என்பனவும் தாக்கப்பட்டன.

சவூதி அரேபியா :  சவூதி அரேபியாவில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க இராணுவ இருப்பை பராமரிக்கின்றது. இதில் முதன்மையான கவனம் வான் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பில் செலுத்தப்படுகின்றது.

இளவரசர் சுல்தான் விமானத் தளம் சவூதி அரேபியாவில் உள்ள முக்கிய அமெரிக்க தளமாகும். இது அந்த நாட்டின் தலைநகரான றியாத்திலிருந்து 100 கிமீ தென்கிழக்கில் அமைந்துள்ளது.

இங்கிருந்து தான் அமெரிக்காவின் 378வது விமானப் படைப் பிரிவு வழி நடத்தப்படுகின்றது.

சவூதியின் விமானப் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கும், அமெரிக்க போர் விமானங்கள் தங்கள் பணிகளைச் செய்வதற்கு ஆதரவளிக்கவும், 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி 2300 க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் இங்கு நிறுத்தப்பட்டிருந்தன என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் 2300 க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் இங்கு நிலை நிறுத்தப்பட்டிருந்தன.

கத்தார்:  கத்தாரின் தலைநகரான தோஹாவுக்கு அருகில் அமைந்துள்ள அல்-உதைட் விமானத் தளம் மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க தளமாகும்.

இது சுமார் 10,000 துருப்புக்களுடன் அமெரிக்க மத்திய கட்டளை பணியகத்தின் முன்னோடி தலைமையகமாக செயல்படுகின்றது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியமைக்கு பதிலடியாக ஈரான் அந்த தளத்தின் மீது ஏவுகணைகத் தாக்குதல்களை நடத்தியது.

பஹ்ரைன் : வளைகுடா, ஓமன் வளைகுடா, அரேபிய கடல், ஏடன் வளைகுடா, செங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளில், நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை பிரிவின் கட்டளைத் தலைமையகம் பஹ்ரைனில் உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் : அல் தஃப்ரா விமானத் தளம், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபிக்கு தெற்கே அமைந்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளை பணியகத்தின் கூற்றுப்படி, இப்பகுதியில் போர், உளவு, மற்றும் பிற பணிகளை மேற்கொள்வதில், இந்த தளம் அமெரிக்க விமானப்படைக்கு பக்க பலமாக உள்ளது.

ஈராக் : அய்ன் அல்-அசாத் விமானத் தளம் மேற்கு அன்பார் மாகாணத்திலும், ஹரிர் விமானத் தளம் ஓரளவு தன்னாட்சி அதிகாரமுள்ள குர்திஸ்தான் பிராந்தியத்திலும் அமைந்துள்ளன.

ஜனவரி 2026 இல் ஈராக்கிய பாதுகாப்பு அமைச்சகம், ஈராக்கிய இராணுவம் நாட்டின் இரண்டாவது பெரிய இராணுவ விமானத் தளமான அய்ன் அல்-அசாத் விமானத் தளத்தின், முழு கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாகக் கூறியது.

ஜோர்டான் : முவாஃபாக் சால்டி விமானத் தளம், ஜோர்டானின் தலைநகரான அம்மானுக்கு வடகிழக்கே 100 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது 332 வது எக்ஸ்பெடிஷனரி பிரிவின் தாயகமாகும்.

குவைத் : குவைத்தின் தலைநகரான குவைத் நகருக்கு தெற்கே அமைந்துள்ள கேம்ப் ஆரிஃப்ஜான், அமெரிக்க மத்திய இராணுவத்தின் மிக முக்கியமான தலைமையகமாக செயல்படுகின்றது.

துருக்கி : அமெரிக்காவும் மற்றும் பிற வடக்கு அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அங்கத்துவ நாடுகளும், துருக்கியில் உள்ள இன்சிர்லிக் விமானப்படை தளத்தில் தத்தமது துருப்புக்களை நிலை நிறுத்தியுள்ளன.

ஈரான் தங்கள் நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ வளங்களைத் தாக்கத் தொடங்கியபோது, அதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க, அமெரிக்கா  தவறிய பின்னர் தான், அரபு சர்வாதிகாரிகளுக்கு ஞானம் தோன்றியதாகத் தெரிகின்றது.

“இந்த கருத்தை பிரதிபலிக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரக மூத்த அறிஞர் அப்துல்கலேக் அப்துல்லா அமெரிக்க தளங்கள்  “ஒரு சுமையே அன்றி ஒரு மூலோபாய சொத்து அல்ல” “என்றும், அமெரிக்க தளங்களை மூடுவது பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது என்றும், ஏனெனில் ஐக்கிய அரபு அமீரகத்தை இனி வாஷிங்டன் பாதுகாக்க தேவையில்லை என்றும் கூறி உள்ளார்”.

போரின் விளைவாக ஐக்கிய அரபு அமீரகம், பல தசாப்தங்களில் அதன் மிக கடுமையான பொருளாதார அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளது.  நாட்டின் பொருளாதாரம் சுற்றுலா, ரியல் எஸ்டேட் தளவசதிகள், மற்றும் நிதிப் பிரிவை பெரிதும் நம்பியுள்ளன.

கடந்த சில வாரங்களில் துபாய் மற்றும் அபுதாபி பங்குச் சந்தைகளில், சந்தை மூலதனத்திலிருந்து 120 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகை நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.  18,400க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மார்ச் மாத இறுதிக்குள் போர் தொடங்கியதிலிருந்து துபாயின் ரியல் எஸ்டேட் வர்த்தக குறியீடுகள் குறைந்துள்ளன. அவை 16 சதவீதம் சரிந்துள்ளன.

எமிரேட்ஸ் மீதான பெரும்பாலான தாக்குதல்கள் இடைமறிக்கப்பட்டாலும், ஏவுகணை மற்றும் ட்ரோன் சிதறல் குப்பைகள், அபுதாபி மற்றும் துபாயில் பல சேதங்களை ஏற்படுத்தின.

பேர்ஜ் அல் அரப்,  பாம் ஜுமைரா, துபாய் விமான நிலையம் மற்றும் புஜைரா எண்ணெய் தொழில்துறை மண்டலம் உட்பட பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன..

மறுபுறம் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் படைகள் தொடுத்த போரில் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு பெரிய பங்கு வகித்துள்ளது என்றும், அமெரிக்கா தன்மீது படையெடுப்பொன்றை மேற்கொண்டால் அமீரகம் தொடர்ந்து தாக்கப்படும் என்றும் ஈரானிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ட்ரம்ப் அச்சுறுத்தி வரும் தரை வழி தாக்குதல், அநேகமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தொடங்கப்படும் என்று ஈரானின் தலைமை நம்புகின்றது. அவ்வாறு நடந்தால் அது அமெரிக்க-இஸ்ரேலிய போரில் நாம் நினைப்பதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்..

கட்டுரையாளர் ஆடம் சாம்செடினின்   கூற்றுப்படி ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போரில், ஐக்கிய அரபு அமீரகம் கணிசமான ஒரு பங்கு வகிக்கின்றது என்றும், எந்தவொரு தரை வழி படையெடுப்பும், அமீரக அரசின் சொத்துக்கள் மீது பரவலான தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிய வருகின்றது.

உலக சந்தைகளைத் தாக்கிய சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேல் போரில், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள மூலோபாய தீவுகளைக் கைப்பற்ற டொனால்ட் டிரம்ப் தரைப்படைகளைப் பயன்படுத்தலாம்  என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த விடயத்தில், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதம் வெளியுலகை நோக்கி பாயும் மையப் புள்ளியான, கார்க் தீவு மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அதிகம் கவனத்தை ஈர்க்காத காஷ்ம் தீவு, ஆகியவற்றில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தகைய நடவடிக்கைகள் பெரும்பாலும் வளைகுடா அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களில் இருந்து தொடங்கப்படலாம்.

போர் வெறிகொண்ட வார்த்தைகள், குறிப்பாக இஸ்ரேலின் மிக நெருங்கிய நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தான் வெளிப்பட்டுள்ளன.

அதன் அமெரிக்காவுக்கான தூதுவர் வோல் ஸ்ட்ரீட் ஜர்னலில் ஒரு கட்டுரையை எழுதி  உள்ளார். அதில் போர்நிறுத்தம் “போதுமானதாக” இருக்காது என்றும், போர்க்குணம் மிக்கவர்கள் “ஈரானின் முழு அளவிலான அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்யும்” ஒரு “உறுதியான முடிவுக்கு” அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் சேர, சில வளைகுடா அரபு நாடுகள் பரிசீலித்து வருவதாக வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

இருப்பினும் ஒரு மூத்த ஈரானிய பாதுகாப்பு அதிகாரியின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு அமீரகம் ஆரம்பத்தில் இருந்தே இந்தப் போரில் செயற்பாட்டு ரீதியாக தீவிர பங்கு வகித்துள்ளதாக தெஹ்ரானில் உள்ள தலைவர்கள் இப்போது  நம்புகின்றார்கள்.

இந்த விடயத்தில் எம். ஈ. ஈ. யிடம் ( மிட்ல் ஈஸ்ட் ஐ) தனியாக கருத்து தெரிவித்துள்ள ஒரு மூத்த ஈரானிய இராஜதந்திர அதிகாரி,  அமெரிக்க தரைத் தாக்குதல் இப்போது நெருங்கிவிட்டதாக தெஹ்ரான் நம்புவதாகக் கூறி உள்ளார்.

தற்போதைய தாமதத்தை ஈரான் ஒரு உண்மையான இராஜதந்திர இடைநிறுத்தமாக பார்க்கவில்லை. ஆனால் மேலதிக துருப்புக்களை அனுப்புவதற்கும் போரின் புதிய கட்டத்திற்கான நகர்வுகளுக்குமான ஒரு காலதாமதமாகவே  பார்க்கின்றது என்று அந்த இராஜதந்திரி மேலும் கூறினார்.

மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா மேலும் ஆயிரக்கணக்கான படையினரை  அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ராய்ட்டர்ஸ் இந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளது. இது ஏற்கனவே பிராந்தியத்தில் உள்ள மிகப் பெரிய அமெரிக்க இராணுவ இருப்பையும் உள்ளடக்கியதாக  அமையும்.

“ஏதேனும் தரை படையெடுப்பு நடந்தால் அல்லது ஈரானிய பிரதேசத்தின் ஏதேனும் ஒரு பகுதி அல்லது அதன் தீவுகள், ஏதேனும் தரை படையெடுப்பின் இலக்காக மாறினால், ஈரான் இப்போது கடை பிடித்து வரும் கட்டுப்பாடு  உடனடியாக முடிவுக்கு வரும்” என்றும் அந்த இராஜதந்திரி எச்சரித்தார்.

“ஈரானிய தாக்குதல்கள் இனி இராணுவ அல்லது உளவுத்துறை வசதிகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட  மாட்டாது.  மாறாக அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் அரசுடன் தொடர்புடைய நலன்கள், அமீரக அரசு முதலீட்டு பங்குகளை வைத்திருக்கும் வணிக மற்றும் சொத்து, ஏனைய சொத்துக்கள், உட்பட எல்லாமே சாத்தியமான இலக்குகளாக மாறும்” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி:மக்களுக்கு ராகுல் நன்றி!

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...

இலங்கை வரவுள்ளார் வியட்நாம் ஜனாதிபதி!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி தோ லாம் அவர்கள் இலங்கைக்கு விஜயம்...

2.5 மில். டொலர் அரச நிதி மோசடி: ஜனாதிபதி பாராளுமன்றில் நாளை உரை

அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம்...

சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு சட்ட நடவடிக்கை

வீசா காலம் நிறைவடைந்து நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு எதிராக...