இலங்கையில் பல சமய, மத நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட பௌத்த-முஸ்லிம் உரையாடல்: மதங்களுக்கிடையிலான புரிதலுக்கான கையேடு” எனும் நூல் வெளியீட்டு விழா இன்று (12) மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தன்வீர் நிறுவனம் (Tanweer Institute) ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கலாநிதி ஆசாத் சிராஸ் மற்றும் திரிபிடகத்தில் நிபுணத்துவம் பெற்ற ரமேஷ் மதுசங்க ஆகியோரின் கூட்டு ஆய்வின் மூலம் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு, இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான வணக்கத்திற்குரிய கல்லெல்லே சுமனசிறி தேரர் தலைமை தாங்குவார்.
தலைமை விருந்தினராக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி கலந்துகொள்ளவுள்ளார்.
கௌரவ விருந்தினர்களாக பிரதி அமைச்சர் முனீர் முலாபர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சமந்த இலங்ககோன் நூல் விமர்சனத்தை நிகழ்த்துவார்.
இந்த புத்தகம் இலங்கையின் இரு பிரதான மதத் தத்துவங்களுக்கு இடையிலான ஒற்றுமைகள் மற்றும் தொடர்புகள் குறித்த கல்விசார் ஆய்வுகளை உள்ளடக்கியது.
மதத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
