முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான மீராசாஹிபு அப்துல் மஜீட் அவர்கள் இன்று (30) காலமானார்.
அன்னாரது ஜனாஸா தற்போது 201, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, கொழும்பு – 05 இல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அன்னார் தனது வாழ்நாள் முழுவதும் அரசியல் துறையிலும், பொலிஸ் சேவையிலும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மக்கள் பணியாற்றிய ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்தார்.
குறிப்பாக, 1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் பயங்கரவாத வன்முறைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட துயரமான காலகட்டத்தில், மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் வாழ்வாதாரத்திற்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளும் உதவிகளும் சமூகத்தால் என்றும் நன்றியுடனும் மரியாதையுடனும் நினைவுகூரத்தக்கவை.
சமூகப் பொறுப்புணர்வுடனும், மனிதாபிமானக் கண்ணோட்டத்துடனும் அவர் ஆற்றிய சேவைகள் மக்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்.
அன்னாரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரை நேசித்த மக்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
மேலும், அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இப்பேரிழப்பைத் தாங்கும் மனப்பக்குவத்தையும் அழகிய பொறுமையையும் வழங்கியருள்வானாக. ஆமீன்!
