இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரையில் 14,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிவேகமாக பரவி வரும் டெங்கு அலையினால் இதுவரை 29 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், பல மருத்துவமனைகள் தங்களின் கொள்ளளவை மீறி நிரம்பியுள்ளன. கொழும்பு, கம்பஹா, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் நுவரெலியா ஆகிய 7 மாவட்டங்கள் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
டெங்கு பரவலைத் தடுக்க அனைத்து அரச நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து அவசர திட்டங்களைச் செயற்படுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குමාநாயக்க விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தகவல்களைப் பரிமாறவும், வழிகாட்டல்களை வழங்கவும் விசேட கட்டுப்பாட்டு அறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் 0117966366 என்ற இலக்கத்தினூடாக (திங்கள் – வெள்ளி: காலை 8 முதல் மாலை 5 வரை; சனி: காலை 8 முதல் நண்பகல் 12 வரை) தொடர்பு கொள்ள முடியும்.
அதிஅபாய வலயங்களில் நேற்று (24) முதல் நாளை (26) வரை மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
டெங்கு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 5,000 க்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், டெங்கு பரவும் வகையில் காணப்படும் பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கும் எதிராக இந்த முறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
