2026 தேசிய மீலாதுன் நபி விழா ஆகஸ்ட் 26ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில்…

Date:

2026 ஆம் ஆண்டு அரச அனுசரணையுடன் விமர்சையாக நடத்தப்படவுள்ள தேசிய மீலாதுன் நபி விழாவின் ஆரம்பகட்ட அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, புத்தசாசன அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர மற்றும் முஸ்லிம் மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ் உட்பட அரச அதிகாரிகள் பலர் நேரடியாகக் கலந்துகொண்டனர்.

இதற்கு மேலதிகமாக, கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்களும் Zoom தொழிநுட்பம் மூலம் இணையவழியில் இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்டத்தின் பிரதான மௌலவிமார்கள், உள்ளூராட்சி பிரதிநிதிகள், கம்பஹா மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட கல்வி அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர்.

அத்துடன், தேசிய விழாவின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் பற்றி கலந்துரையாடுவதற்காக இலங்கை பொலிஸார் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்களிப்பு செய்தனர்.

இங்கு உரையாற்றிய மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், இந்த தேசிய மீலாதுன் நபி விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்காக இதுவரை அர்பணிப்புடன் செயல்பட்டு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

அடுத்தகட்ட ஏற்பாட்டு பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைவரினதும் தொடர் ஒத்துழைப்பை எதிர்பார்பதாகக் கூறிய பிரதி அமைச்சர், கம்பஹா மாவட்ட மக்கள் முடிந்தவரை அதிகளவில் இதில் பங்கேற்று விழாவை மிகவும் விமர்சையாக நிறைவு செய்ய ஒன்றிணையுமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆரம்பகட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் விழாவிற்கான பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன், நடத்தப்படவுள்ள மத, கலாசார நிகழ்சிகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் பாடசாலைப் போட்டிகள் பற்றியும் ஆராயப்பட்டது.

இதில் ஒரு விசேட நடவடிக்கையாக, முஸ்லிம் பள்ளிவாசல் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ், தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கான நிதி நன்கொடைக்கான உறுதிப்படுத்தல் கடிதங்கள், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் மூலம் அப்பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகளுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.

இதற்கு மேலதிகமாக தேசிய மீலாதுன் நபி விழாவுடன் இணைந்து அன்றைய தினம் நினைவு அஞ்சல் முத்திரை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

இம்முறை 42ஆவது தேசிய மீலாதுன் நபி பிரதான அரச விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி கௌரவ ஜனாதிபதியின் தலைமையிலும் பங்கேற்பிலும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இன்று கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் மற்றும் ஏற்பாட்டு பணிகளின் மீளாய்வு செய்வதற்கான அடுத்த விசேட கூட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதி நீர்கொழும்பு அல்-ஹிலால் முஸ்லிம் வித்தியாலய வளாகத்தில் நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

Popular

More like this
Related

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...