கொழும்பு தர்மசக்தி பவுண்டேஷன் (Dharmashakthi Foundation) ஒருங்கிணைப்பில் இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு, நேற்று நண்பகலில் கொழும்பு, தெஹிவளை முஹியித்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தர்மசக்தி அமைப்பு இலங்கை நாட்டில் பல்வேறு அமைப்புகளோடு இணைந்து, நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்காக அதன் தலைவர், கண்ணியத்திற்குரிய மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரருடைய தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது.
இந்த வரிசையில், தென்கொரியாவில் இயங்கி வருகின்ற (Peace Foundation) சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்கள், இலங்கையிலுள்ள சமாதான நல்லிணக்கப் பணிகளை நேரில் கண்டுகொள்வதற்காக வருகை தந்தபோது, அவர்களுக்கான முஸ்லிம் சமூகம் சார்பான வரவேற்பை, முஸ்லிம் சமய கலாசார திணைக்களமும் தெஹிவளை பள்ளிவாசலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு. நிலோபர் அவர்களின் ஒருங்கிணைப்பில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களும், சிறப்பு அதிதியாக சமய விவகார மற்றும் முஸ்லிம் விவகார பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் அவர்களும், விசேட அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் அவர்களும் கலந்துகொண்டதோடு, பல சகவாழ்வு மற்றும் சமாதானப் பணியில் ஈடுபடுகின்ற பிரமுகர்கள், அமைப்புகளைச் சார்ந்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பள்ளிவாசலுக்குள் வரவேற்கப்பட்ட தென்கொரிய சர்வமத குழுவினர் உள்ளிட்ட அனைத்து பிரமுகர்களும் பள்ளிவாசலுக்குள் வரவேற்கப்பட்டு பின்னர் ளுஹர் தொழுகைக்கான நேரம் வந்ததைத் தொடர்ந்து, அவர்கள் தொழுகைகளை அவதானிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக அது அமைந்தது. அதனைத் தொடர்ந்து பள்ளிவாசலிலே பகல் போrன ஏற்பாடும், தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தென்கொரிய சமாதான அமைப்பைச் சேர்ந்த சர்வமத தலைவர்கள் உட்பட, தர்மசக்தி பவுண்டேஷனுடைய அங்கத்தவர்களும், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களும், ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் அர்கம் நூராமித், பிரதி அமைச்சர் முனீர் முலப்பர், திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நிலோபர் உட்பட இன்னும் பலர் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
“சமாதானமும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியும்” என்ற தலைப்பிலே இந்தக் கலந்துரையாடலை தர்மசக்தி பவுண்டேஷன், முஸ்லிம் விவகார திணைக்களத்துடன் சேர்ந்து ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தர்மசக்தி பவுண்டேஷனுடைய செயலாளர் அருட்தந்தை அனுர பெரேரா நன்றியுரை நிகழ்த்தினார்.
நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் சகல மக்கள் மத்தியிலும் ஏற்படுத்துவதற்காக, தர்மசக்தி பவுண்டேஷன் பல தரப்பினரோடும் மேற்கொள்கின்ற இவ்வாறான பணிகள், தொடர்ந்தும் நாட்டில் பரவலாக இடம்பெற்று, ஒரு ஐக்கியமான, சகல துறைகளிலும் முன்னேற்றமடைந்த ஒரு தேசம் உருவாக வேண்டும் என்பதே எல்லோருடைய அவாவாக இருக்கிறது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கான அனுசரணையை தெஹிவளை முஹியித்தீன் ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகம் மிகச் சிறப்பாக மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


