கண் சத்திர சிகிச்சைக்குப் பிறகு Prednisolone Acetate மருந்து வழங்கப்பட்டதால் பார்வை இழந்த நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய நோயாளி ஒருவருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் இழப்பீடு வழங்க இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டில் குறித்த மருந்தை பயன்படுத்தியதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்கண் சத்திர சிகிச்சை செய்து கொண்ட சில நோயாளிகளின் பார்வை இழக்கப்பட்ட அல்லது மேலும் பலவீனமடைந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்கண் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பார்வை இழந்த 17 நோயாளிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை பயன்படுத்தியதால் கண் பாதிப்புக்குள்ளான நோயாளிகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவினால், பார்வை இழந்த மேலும் 4 நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த நான்கு நோயாளிகளுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
