மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையின் போது கைதிகளால் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களை மதிப்பிடுவதற்காக 5 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சேதங்களை துல்லியமாக மதிப்பிடுவதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக புனரமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை கைதிகள் ஏற்படுத்திய வன்முறையின் போது, மறுவாழ்வுப் பிரிவு கட்டிடம், பார்வையாளர்கள் சந்திப்பு பகுதி, சிறைச்சாலை வைத்தியசாலை, சமையலறை, பிரதான ஜெயிலரின் அலுவலகம் மற்றும் தொழிற்துறை பிரிவு உள்ளிட்ட பல நிர்வாகக் கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வார்டுகளைத் தவிர்த்து, நிர்வாகக் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
கடந்த 2020 நவம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறையில் ஏற்பட்ட மோதலின் பின்னரே இக்கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டன. அவை மீண்டும் தற்போது சேதமாக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற முழுமையான சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுக்க 3 அதிகாரிகள் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
