இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயமும், பாகிஸ்தானிய சமூகத்தினரும் இணைந்து பாகிஸ்தானின் 79-வது சுதந்திர தினத்தை இன்று தேசிய உணர்வுடனும், முற்போக்கான மற்றும் வளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் உறுதியுடனும் கோலாகலமாகக் கொண்டாடினர்.
கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர் (Major General Retd Dr. Nayyar Naseer) தேசியக் கொடியை ஏற்றி வைத்ததுடன், பாகிஸ்தான் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சிறப்புச் செய்திகள் வாசிக்கப்பட்டன.
தனது சிறப்புரையில், பாகிஸ்தானின் தேசியத் தந்தை குவாத்-ஏ-அஸாம் முஹம்மது அலி ஜின்னா மற்றும் சிந்தனையாளர் அல்லாமா முஹம்மது இக்பால் ஆகியோருக்கு உயர்ஸ்தானிகர் கலாநிதி நய்யார் நசீர் வீரவணக்கம் செலுத்தினார்.
பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு என்றும், ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை உட்பட பிராந்தியப் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் தீர்ப்பதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் இறையாண்மை மற்றும் முக்கிய நீர் வளங்களைப் பாதுகாப்பதில் பாகிஸ்தானின் உறுதியான நிலையை அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது ஆழமான நன்றியைத் தெரிவித்துக் கொண்ட உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) கீழ் அடைந்துள்ள முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் மருந்துத் துறையில் பாகிஸ்தானிய நிறுவனங்களின் முதலீடுகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
காந்தார பௌத்த சுற்றுலா (Gandhara Buddhist Tourism) மற்றும் கல்விசார் பரிமாற்றங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் (EDB) இணைந்து ‘ஸ்ரீலங்கா-பாகிஸ்தான் பிசினஸ் ஃபோரம்’ விரைவில் நடத்தப்படவுள்ளது.
இலங்கை முக்கிய பிரமுகர்கள், இராஜதந்திரிகள், தொழிலதிபர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான காலத்தால் அழியாத, நிபந்தனையற்ற நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.

