காசாவில் தினமும் இரவு பல பாலஸ்தீனர்களை இஸ்ரேலியப் படைகள் கொல்ல வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்வீர் உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அமெரிக்க செனட்டர் ஜாக்கி ரோசன் கோரியுள்ளார்.
நெவாடா மாநிலத்தைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டரும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளருமான ஜாக்கி ரோசன், பென் க்வீரின் இந்தக் கருத்துக்கள் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று கண்டித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் மீதான வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் பொதுப் பதவிகளில் வகிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பென் க்வீரின் கருத்துக்களுக்கு பகிரங்கமாகக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்தக் கருத்துக்கள் இஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கையைப் பிரதிபலிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ரோசன் வலியுறுத்தியுள்ளார்.
தீவிர வலதுசாரி ‘ஒட்ஸுமா யெஹுடி’ (Otzma Yehudit) கட்சியின் தலைவரான பென் க்வீர், பாலஸ்தீனர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய பேச்சுக்கள், இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவாக்குதல், காசாவிலிருந்து பாலஸ்தீனர்கள் வெளியேறுவதை ஊக்குவித்தல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் தீவிர இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் தொடர் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.
இஸ்ரேலின் காவல் துறையைக் கண்காணிக்கும் தேசிய பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் பென் க்வீர், தனது பேச்சுக்கள் மற்றும் கொள்கைகளால் வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பலமுறை மோதல் போக்கைக் கொண்டுள்ளார்.
அமெரிக்க-இஸ்ரேல் உறவுகளை வலுவாக ஆதரிக்கும் செனட்டர் ரோசனின் இந்தக் கோரிக்கை, இஸ்ரேலிய அமைச்சரவை உறுப்பினருக்கு எதிராக அமெரிக்கச் சட்டமியற்றுபவர் ஒருவர் பகிரங்கமாக நடவடிக்கை எடுக்கக் கோரும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
