‘மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்’ கீழ் நிறுவப்பட்ட ‘மூலோபாய அரசியல் மற்றும் பாதுகாப்புக்கான குழுவின்’ முதல் கூட்டம், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஒரு செயல்பாட்டு கட்டமைப்பாக மாற்றுவது மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
இதில், பாகிஸ்தான் சார்பில் துணைப் பிரதமர் முகமது இஷாக் தார், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா முகமது ஆசிஃப் மற்றும் ராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைவருமான ஃபீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்பது, துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய சகோதர நாடுகளுடனான பாகிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவையும், பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான அதன் விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் மற்றும் சவுதி அரேபியாவின் முக்கிய ராணுவ மற்றும் தூதரக அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
