பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) வெளியிட்டுள்ள புதிய ஆய்வின்படி, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
30 விடுமுறை நாட்களுடன் மியான்மர் முதலிடத்திலும், 29 நாட்களுடன் பங்களாதேஷ் இரண்டாமிடத்திலும் உள்ளன.
190 ஐ.நா உறுப்பு நாடுகளின் சராசரி விடுமுறை நாட்கள் 13 ஆக உள்ள நிலையில், இலங்கையில் 2026-இல் 25 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பௌத்த மதத்தைச் சேர்ந்த இலங்கையில், ஒவ்வொரு பௌர்ணமி தினமும் (‘போயா’ தினம்) பொது விடுமுறையாக அறிவிக்கப்படுவதே நாட்டின் விடுமுறை நாட்கள் அதிகரிக்க முக்கியக் காரணமாகும்.
சுவிட்சர்லாந்தில் ஒரே ஒரு தேசிய விடுமுறை மட்டுமே உள்ளது. பொஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினாவில் 4 நாட்களும், உருகுவேயில் 5 நாட்களும் மட்டுமே விடுமுறையாக வழங்கப்படுகின்றன.
நத்தார், புனித வெள்ளி, ரமலான் (ஈகைத் திருநாள்), பக்ரீத் (ஹஜ் பெருநாள்), தீபாவளி மற்றும் வெசாக் ஆகிய பண்டிகைகள் உலகளாவிய ரீதியில் பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் பொது விடுமுறைகளாகும்.
இருப்பினும், அனைத்து பௌர்ணமி தினங்களையும் விடுமுறையாக அறிவிக்கும் வழக்கம் இலங்கையை பிற நாடுகளிலிருந்து தனித்துவப்படுத்திக் காட்டுகிறது.
1971 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விடுமுறைகள் சட்டத்தின் கீழ், 2027 ஆம் ஆண்டிற்கான 25 பொது மற்றும் வங்கி விடுமுறைகள் அடங்கிய நாட்காட்டி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
2027-இல் 9 விடுமுறை நாட்கள் வெள்ளிக்கிழமை அல்லது திங்கள்கிழமைகளில் வருவதால், தொடர்ச்சியாக 3 நாட்கள் வார இறுதி விடுமுறை கிடைக்கும்.
ஜனவரி மாதத்தில் மட்டும் இருமுறை இத்தகைய நீண்ட வார இறுதி விடுமுறைகள் வருகின்றன.
மே மாதத்தின் 3வது வாரத்தில் ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகைகள் வருவதால், அந்த வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும்.
இருப்பினும் மே தினம் மற்றும் நத்தார் உட்பட 6 விடுமுறை நாட்கள் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.
