“ஒற்றுமையும் சரியான சிந்தனையும் சமூக எழுச்சியின் அடித்தளம்”:ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய தலைவர் அஷ்ரப் ஜமால்தீன் உரை  

Date:

“நற்கருமங்களிலும் பொதுநலப் பணிகளிலும் பரஸ்பரம் ஒத்துழைத்து, விட்டுக்கொடுத்து, உற்சாகத்துடன் இணைந்து செயல்படும் ஒரு சிறந்த பண்பு திருகோணமலைப் பிரதேசத்தில் காணப்படுகிறது. இது இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரு வாழும் உதாரணமாகும்”. என கடந்த 2026 ஆகஸ்ட் 8 ஆம் திகதி கிண்ணியாவில் நடைபெற்ற இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் திருகோணமலை பிராந்திய வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர், சட்டத்தரணி அஷ்ஷெய்க் அஷ்ரப் ஜமால்தீன் நளீமி குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமீர் அவர்கள், _ஒரு சமூகத்திலுள்ள மக்களின் சிந்தனைத் தரமும் அறிவாற்றலும் வெவ்வேறு நிலைகளில் இருக்கலாம். ஒருவர் மிக உயர்வாகச் சிந்திக்கலாம்; மற்றொருவர் சாதாரண நிலையில் சிந்திக்கலாம். எனினும், தொழுகையில் அனைவரும் ஒரே வரிசையில் நிற்பது போன்று, சமூகத்தின் பொதுவான இலக்குகளுக்காக அனைவரும் ஒரே அணியில் நின்று பாடுபட வேண்டும்_ என்றும் தெரிவித்தார்.

வித்தியாசமான கருத்துக்கள் இருப்பது தவறல்ல. ஆனால், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, பரஸ்பரம் பிரார்த்தனை செய்து, புரிந்துணர்வுடன் இணைந்து செயலாற்றுவது சமூகத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான அம்சங்களாகும்_ என்றும் அவர் கூறினார்.

இஸ்லாமிய சிந்தனையாளர் மாலிக் நபி எழுதிய ‘எழுச்சியின் நிபந்தனைகள்’ என்ற நூல், சமூக வாழ்வின் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணிகளை விளக்குகின்றது. தோல்விக்கான வழிமுறைகளைப் பின்பற்றும் ஒரு சமூகம் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. உதாரணமாக, மோசமான உணவுப் பழக்கங்களைக் கொண்ட ஒருவர் தேக ஆரோக்கியமிக்கவராக மாறுவார் என்று எதிர்பார்க்க முடியாது.

அவர் நீரிழிவு நோயாளியாகவோ அல்லது சிறுநீரகப் பாதிப்புக்குள்ளானவராகவோ மாற நேரிடலாம். அதைப் போலவே, ஒரு சமூகம் தோல்விக்கான காரணிகளின் பாதையில் சென்றுகொண்டே வளர்ச்சியையும் உயர்ச்சியையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் விளக்கினார்.

வரலாறு என்பது வெறும் சம்பவங்களின் தொகுப்பு அல்ல. ஒவ்வொரு சம்பவத்திற்குப் பின்னாலும் அவற்றை உருவாக்கிய காரணிகள் இருக்கின்றன. எனவே, வெற்றிக்கான காரணிகள் எவை, தோல்விக்கான காரணங்கள் எவை என்பதைப் புரிந்துகொண்டும் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒரு சமூகத்தில் வசதி வாய்ப்புகள், தொழில்நுட்பம், அதிகாரம் போன்றவை மட்டும் இருப்பதால் வெற்றி கிடைத்துவிடாது.

சிறந்த மார்க்கச் சிந்தனைகள் சமூகத்தை வழிநடத்த வேண்டும். தோல்வியை நோக்கி வழிநடத்தும் சிந்தனைகள் ஒருபோதும் எம்மை முன்னேற்றாது. வெற்றியை நோக்கி வழிநடத்தும் சிந்தனைகளோடு நாம் வாழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நபிமார்களின் வாழ்வியல் முன்மாதிரிகளை நோக்கும்போது, அவர்கள் அனைவரும் இறைவனை மட்டுமே வணங்குமாறு ஏகத்துவ அழைப்பை விடுத்த அதேவேளையில், மனிதர்களின் உலகியல் வாழ்வும் சிறப்புறவும், அவர்கள் வாழ்வாங்கு வாழவும் வழிகாட்டியுள்ளனர்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தவ்ஹீதை ஏந்திய அதேவேளையில், வளங்கள் செழிப்படைய வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். தாவூத் (அலை) அவர்களுக்கு போரில் பாதுகாப்பளிக்கும் கவசங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அல்லாஹ் கற்றுக்கொடுத்ததாக அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. துல்கர்னைன் அவர்களுக்கு மிகப்பெரிய தொழில்நுட்ப அறிவும் ஆற்றலும் வழங்கப்பட்டிருந்ததாகவும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.

எனவே, ஒரு பக்கம் இறைவனுக்கு அடிபணிந்து அவனை வணங்கி வழிபடும் அதேவேளையில், மறுபக்கம் நிம்மதியானதும் சந்தோஷமானதுமான உலக வாழ்வை உருவாக்குவதற்குத் தேவையான சிந்தனையும் ஒரு சமூகத்திடம் இருக்க வேண்டும் என்று பல்வேறு உதாரணங்களின் ஊடாக சமூகச் சிந்தனையின் முக்கியத்துவத்தை அமீர் அவர்கள் விளக்கினார்.

இவ்வமர்வில் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, மூதூர் மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பல்வேறு சமூக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மார்க்க அறிஞர்கள், சமூகத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நலன்விரும்பிகள் பங்கேற்றமை சிறப்பம்சமாகும்.

நிகழ்வில் கலந்துகொண்ட பலரும் அமீர் அவர்களின் கருத்துக்களை வரவேற்றதோடு ஒருங்கிணைந்து செயற்படவும் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கவும் உறுதியளித்தனர்.

இவ்வமர்வின்போது திருகோணமலை பிராந்தியத்தின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பான அறிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

அடுத்த இரண்டு வருடங்களுக்கான புதிய பிராந்திய சூரா உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன், பிராந்திய நாஸிமாக நியமிக்கப்பட்ட சகோதரர் ஏ. எம். நஜாஹ் ஆசிரியர் தனது கடமைகளை இக்கூட்டத்தின் போது பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருகோணமலை பிராந்தியத்திற்குட்பட்ட சகல கிளைகள் மற்றும் மன்றங்களைச் சேர்ந்த ஜமாஅத்தின் அங்கத்தவர்கள் மற்றும் பெண்கள் அணி உறுப்பினர்கள் பெருமளவில் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை!

தற்போது வழங்கப்படும் அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, அடுத்த சில...

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக...

ஊவா, மட்டு, அம்பாறையில் பிற்பகலில் மழைக்கு சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்...