துனிசியாவில் கடந்த சில வாரங்களாக வீசி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, அந்நாட்டுச் சிறைகளில் 20 கைதிகள் உயிரிழந்துள்ளதாகத் துனிசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் (LTDH) தலைவர் பாசம் அல்-த்ரீஃபி தெரிவித்துள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டிப் பதிவாகியுள்ளது. இது குறித்து பாசம் அல்-த்ரீஃபி தெரிவிக்கையில்,
போதுமான காற்றோட்டம் இல்லாதது மற்றும் கைதிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பது போன்ற சிறைகளின் மோசமான சூழல்கள், இந்த வெப்ப அலையால் மேலும் தீவிரமடைந்துள்ளன.
சிறைகளில் நிலவும் இந்த இக்கட்டான நிலைமைகள் “சித்திரவதைக்குச் சமமானது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்ட பக்கவாதத்தால் 50 வயதுடைய கைதி ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் துனிஸில் உள்ள அல்-முர்னாகியா சிறையில், வெப்பம் காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் மற்றொரு கைதி உயிரிழந்ததாக ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறைகளில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
