மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சவூதி அரேபியாவிற்கான விமானப் போக்குவரத்தில் தடங்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால், உம்பா (Umrah) புனிதப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஜெத்தாவில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அவசர பயண ஆலோசனையை விடுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (13) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், பயண ஏற்பாடுகளைச் செய்யும்போது இலங்கைப் பயணிகள் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தூதரகம் விடுத்துள்ள முக்கிய வழிகாட்டல்கள்:
- உம்ரா பயணத்திற்குத் திட்டமிட்டுள்ள இலங்கையர்கள், தங்களது பயணத் திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள தங்களது குழுப் பிரதிநிதிகள் அல்லது பயண முகவர்களுடன் (Travel Agents) நெருங்கிய தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- பயணத்தின் போது எதிர்பாராத அசம்பாவிதங்கள் அல்லது அவசர நிலைகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளை முன் கூட்டியே செய்து கொள்ளுமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
விமான சேவைகள் ரத்து மற்றும் இடைநிறுத்தம்:
யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவைக் இலக்கு வைத்து தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ரியாத்தில் உள்ள ‘கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை’ (King Khalid International Airport) இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அக்டோபர் 17 ஆம் திகதி வரை அங்கு விமான செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவும், பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற் கொண்டும், ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம் ரியாத்துக்கான தனது விமான சேவைகளையும், கொழும்பு – தமாம் இடையிலான விமான சேவைகளையும் அக்டோபர் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
