Tuesday, November 17, 2026

சமூக நல்லிணக்கமும் சகோதரத்துவமும்: இரு பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற விசேட புரிந்துணர்வு நிகழ்ச்சி!

2 min read · 25 reads
மத நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வுகளையும் பலப்படுத்தும் நோக்கில், வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேசிய பாடசாலையின் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவ, மாணவிகள் குழுவினர், பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் குளியாப்பிட்டிய பண்டார கொஸ்த்த முஸ்லிம் மகா வித்யாலயத்தின் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து MANBAUL HAIRATH JUMMA MASJID பள்ளிவாசலுக்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
கடந்த 2026 நவம்பர் 06 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை மிகச் சிறப்பான முறையில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.
இஸ்லாமிய மார்க்கம், முஸ்லிம் சமூகத்தின் மத அனுஷ்டானங்கள் மற்றும் கலாசார விழுமியங்கள் தொடர்பாக நடைமுறை ரீதியான புரிந்துணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சியியில் கலிமா பற்றிய விளக்கம் மற்றும் இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம். தினசரி ஐவேளைத் தொழுகை (ஸலாத்) மற்றும் அதன் செய்முறை விளக்கங்கள், ஸகாத், நோன்பு (ஸவ்ம்) மற்றும் ஹஜ் கடமைகள் பற்றிய விழிப்புணர்வு.

பெற்றோர்களையும் பெரியோர்களையும் மதித்து நடத்தல், அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணுதல், நோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவி செய்தல், மற்றும் குடும்ப உறவுகளைப் பேண வேண்டிய முறைகள்.
ஜனாஸா நல்லடக்க நடைமுறைகள் பற்றிய செய்முறை விளக்கம். ஜும்ஆ குத்பா பிரசங்கத்தில் மாணவர்கள் கலந்துகொண்டு அதனைச் செவிமடுக்கும் வாய்ப்பு. பள்ளிவாசலின் பல்வேறு பகுதிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றிய அறிமுகம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரநடுகை வேலைத் திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் முக்கிய சிறப்பம்சங்களும் விளக்கங்களும் கொடுக்கப்பட்டன.
வருகை தந்த மாணவர்களுக்கும் அதிதிகளுக்கும் சிற்றுண்டி மற்றும் பகல் உணவு வழங்கப்பட்டதுடன், மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அத்துடன், வருகை தந்த பாடசாலைக்குப் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி குறித்து மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கருத்துகளும் கேட்கப்பட்டன.
இவ்வாறான ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகள் ஊடாக வெவ்வேறு மதங்களைச் சார்ந்த மக்களிடையே காணப்படும் இடைவெளிகளைக் குறைத்து, ஒருவரின் மத நம்பிக்கைகளை மற்றவர் மதிக்கும் பண்பையும், சகோதரத்துவம், நட்புறவு மற்றும் தேசிய ஒற்றுமையையும் பலமாக வளர்க்க முடியும் என இந்நிகழ்ச்சி மெய்ப்படுத்திக் காட்டியுள்ளது.
நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், கௌரவத்திற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் மற்றும் நிகழ்வின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு இஸ்லாம் பற்றிய தெளிவான அறிவைப் பெற்றுக்கொள்ளவும், சமூகங்களுக்கு இடையே அன்புடனும் நட்புடனும் நேரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் கிடைத்த ஒரு பெறுமதியான வாய்ப்பாக இது அமைந்தது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.