பொலிஸாரை அச்சுறுத்தித் தகாத வார்த்தைகளால் திட்டிய பலாங்கொடை காஸ்ஸப தேரர்: காணொளியால் பரபரப்பு
அநுராதபுரம் ருவன்வெலிசாயவிற்கு அருகில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட பலாங்கொடை காஸ்ஸப தேரர், பொலிஸ் அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
நேற்று (12) இடம்பெற்ற இச்சம்பவத்தின் பின்னர் வெளியாகியுள்ள குறித்த காணொளியில், வைத்தியசாலைக் கட்டிலில் இருக்கும் தேரரைச் சூழ மருத்துவப் பணியாளர்களும் பொலிஸ் அதிகாரிகளும் நிற்பது பதிவாகியுள்ளது.
இதன்போது, தமக்குப் பாதுகாப்பாக நின்ற பொலிஸ் அதிகாரிகளை நோக்கி தேரர் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தல் விடுக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
அநுராதபுரம் ருவன்வெலிசாயவிற்கு அருகில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை காஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள், போராட்டக் களத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சத்தியாக்கிரகப் போராட்டக் களத்தில் இருந்த காஸ்ஸப தேரர் தரப்பினருக்கும், வணக்கத்திற்குரிய ராஜாங்கனயே சத்தாரத்ன தேரர் மற்றும் பொதுமக்கள் சிலர் அடங்கிய மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்தே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, அநுராதபுரம் புனித நகரப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொடை காஸ்ஸப தேரர் மற்றும் ஏனைய ஆறு பேரை எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புனித பூமியில் முன்னர் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை மீறித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே சந்தேகநபர்களுக்கு இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.