சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃபில் நடைபெற்ற 46வது ‘அப்துல் அஜீஸ் மன்னர் சர்வதேச திருக்குர்ஆன் மனனம், ஓதுதல் மற்றும் விரிவுரை போட்டியில்’ 3ஆம் இடத்தைப் பிடித்து இலங்கை தாயகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள அல்-ஹாஃபிழ் முஹம்மத் இம்தாதிற்கு, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வருகை தந்த பல திறமையான போட்டியாளர்களுக்கு மத்தியில் அல்-ஹாஃபிழ் முஹம்மத் இம்தாத் சாதனை படைத்திருப்பது இலங்கைக்குக் கிடைத்த மாபெரும் பெருமையாகும்.
இதுபோன்ற உயரிய சர்வதேசப் போட்டிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என ஊக்குவித்த தூதுவர், அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை நடைபெற்ற 46வது சர்வதேசத் திருக்குர்ஆன் போட்டி பல வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டுள்ளது.
உலகின் 133 நாடுகளிலிருந்து 334 போட்டியாளர்கள் (202 ஆண்கள், 132 பெண்கள்) இதில் பங்கேற்றனர்.
இப்போட்டி வரலாற்றிலேயே முதன்முறையாகப் பெண் போட்டியாளர்களும் சேர்க்கப்பட்டு இம்முறை சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகெங்கிலும் உள்ள குர்ஆன் மனனக் கலை வல்லுநர்களுக்கு (ஹுஃப்பாழ்) இத்தகைய அரிய வாய்ப்பை வழங்கி ஊக்கமளித்து வரும் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜீஸ் அல் சவூத், இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சர் அப்துல்லத்தீப் பின் அப்துல்அஜீஸ் அல்-ஷேக் ஆகியோருக்கு இலங்கைத் தூதுவர் தனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
