2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு வரும் 22 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.
கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை (08) முழுமையாக நிறைவடைந்தது.
நவரத்ன மாரசிங்க (தலைவர்), சுஜீவ நிஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மூவரடங்கிய நிரந்தர மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இவ்வழக்கை விசாரித்தது.
2023 ஒக்டோபர் 10 ஆம் திகதி ஆரம்பமான முறைப்பாட்டாளர் தரப்பு விசாரணை, 2026 ஆகஸ்ட் 13 அன்று நிறைவடைந்தது. மொத்தம் 249 நாட்கள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
வழக்குத் தாக்கல் செய்யப்படுகையில் 2,309 சாட்சிகள் பட்டியலிடப்பட்டிருந்த போதிலும், 547 சாட்சிகளே விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். 224 பேர் கொல்லப்பட்டதுடன் 584 பேர் காயமடைந்த இச்சம்பவம் தொடர்பாக பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தொடரப்பட்டது. இருப்பினும், 17 ஆவது பிரதிவாதி உயிரிழந்ததால் விசாரணை 24 பேராகக் குறைக்கப்பட்டது.
பிரதிவாதிகள் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைத்தன்மையை ஆராய ‘Voyre Dire’ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 8 ஆவது பிரதிவாதியான முகமது பிரவூஸின் வாக்குமூலம் தன்னிச்சையாக வழங்கப்படவில்லை என நீதிமன்றம் தீர்மானித்தது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை மொத்தம் 31 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
