Tuesday, November 17, 2026

இணையவழி மோசடியாளர்களைக் கண்டறிய இலங்கையில் களமிறங்கும் FBI குழு!

2 min read · 3 reads

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறையைத் தொடர்ந்து, தங்களது சட்டவிரோத நடவடிக்கைகளை இலங்கைக்கு மாற்றிய இணையவழி மோசடியாளர்களைக் கண்டறிய, அமெரிக்க மத்திய புலனாய்வுப் பணியகம் (FBI) இலங்கை சட்ட அமுலாக்கத் துறைக்கு உதவும் என்று அமெரிக்கத் தூதரகம் திங்களன்று (16) தெரிவித்தது.

மோசடி வலைப்பின்னல்கள் தங்கள் செயல்பாடுகளை இலங்கைக்கு அதிகளவில் மாற்றியுள்ளதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாராளமான விசா நடைமுறைகள் மற்றும் நம்பகமான, அதிவேக இணைய வசதி ஆகியவற்றைக் கொண்ட இலங்கை, அவர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக உள்ளது.

இந்த நிலையில், தெற்காசிய நாடான இலங்கையில் இயங்கும் நாடுகடந்த குற்றக் கும்பல்களின் செயல்பாடுகளை முறியடிக்கும் நோக்கில், புலனாய்வு நுட்பங்கள், டிஜிட்டல் தடயவியல் மற்றும் வழக்கு மேம்பாடு தொடர்பான விவகாரங்களில் இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் இணைந்து FBI பணியாளர்கள் பணியாற்றுவார்கள் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திங்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் ஒரு வார காலத்திற்கு, இலங்கையில் உள்ள புலனாய்வாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், குற்றச் செயல்களைக் கண்டறியவும், இணைய மோசடிகளுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக வலுவான வழக்குகளை உருவாக்க உதவவும் FBI குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளதாக அந்தத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இணையப் பயனர்களைப் போலி காதல் உறவுகள், கிரிப்டோகரன்சி முதலீடுகள் மற்றும் பந்தயத் தளங்களுக்குள் ஈர்த்து ஏமாற்றும் மோசடி மையங்கள், தென்கிழக்கு ஆசியா முழுவதும் பெருகியுள்ளன.

தொடக்கத்தில் பெரும்பாலும் சீன மொழி பேசுபவர்களை இலக்காகக் கொண்டிருந்த, அந்த மோசடிகளுக்குப் பின்னாலுள்ள குற்றக் குழுக்கள், தற்போது தங்கள் செயல்பாடுகளைப் பல மொழிகளில் விரிவுபடுத்தியுள்ளன.

இந்த மோசடிகளில் ஈடுபடுபவர்களில் சிலர் தாமாகவே முன்வந்து மோசடியில் ஈடுபடும் நபர்களாக இருப்பதுடன், ஏனையோர் ஆட்கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு பணியமர்த்தப்படும் வெளிநாட்டுப் பிரஜைகளாகவும் உள்ளனர்.

இலங்கையில் செயற்படும் இந்தக் குற்றவியல் வலையமைப்புகள் இந்தியா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை இலக்கு வைத்து மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், அடுத்ததாக இலங்கையர்களும் இத்தகைய மோசடிகளுக்கு இலக்காகக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கம் முதல், இணையவழிக் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், பெரும்பாலும் சீனா, வியட்நாம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 1,100 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளை இலங்கைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதாக சீனா உறுதியளித்துள்ளதுடன், இலங்கையும் சீனாவின் உதவியைக் கோரியுள்ளது.

கம்போடியா, மியன்மார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சட்ட அமுலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இலங்கையில் இத்தகைய குற்றச்செயல்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.