புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வேப்பமடு பகுதியைச் சேர்ந்த தாயும், மகளும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சித்தி அஜிபா (வயது 51) மற்றும் அவரது மகள் பாத்திமா சஹானா (வயது 37) ஆகிய இருவருமே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று முன்தினம் (06) உயிரிழந்துள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்த குறித்த தாயும், மகளும் ஒரே வீட்டில் வசித்து வந்தவர்கள் எனவும் குறித்த தாய் காலையும், அவரது மகள் அதே தினத்தன்று நண்பகள் வேளையும் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த குறித்த தாயும், மகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவ்விருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த தாயினதும், மகளினதும் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரு ஜனாஸாக்களும் ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம்,கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, உயிரிழந்த சித்தி அஜிபா எனும் 51 வயதானவரின் கணவரான முஹம்மது நிஸ்தார் (வயது 56) என்பவர் கடந்த 4ம் திகதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.