உடல் ஊனமுற்றோரை சமூகம் அங்கவீனர்கள் எனக் சுட்டிக் காட்டுவதை நிறுத்த வேண்டும்: இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்!

Date:

உலகளாவிய ரீதியில் இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

உலக மக்கள் அனைவரும் ஊனமுற்றோரின் பிரச்சினைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் உருவானதே சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஆகும்.

இவ்வுலகில் மானிடராக பிறப்பதே அதிர்ஸ்டமானதொரு விடயமாகும். அவ்மானிடப்பிறப்பில் ஊனமோ, அங்கவீனமோ ஒரு குறையல்ல. ஒவ்வொருவரதும் ஊனமும் அங்கவீனமும் அவரது மனதிலேதான் உண்டு. உடம்பில் இல்லை என்பதை புரிந்து கொண்டு அனைவரும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதே நியதி.

உடல் ஊனமுற்றோரை சமூகம் அங்கவீனர்கள் எனக் சுட்டிக் காட்டுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை 1981 ஆம் ஆண்டை உலக ஊனமுற்றோர் ஆண்டாக முதன் முதலில் அறிவித்தது. அதன் பின்னர் 1982 ஆம் ஆண்டின் டிசம்பர் 3 ஆம் நாளை அனைத்துலக ஊனமுற்றோர் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் சர்வதேச ஊனமுற்றோர் தினம் என அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளிகள் என்பது பிறப்பில் இருந்தோ அல்லது அதன்பின்போ ஒருவருக்கு உடல், உள ஆற்றல்களில் ஏதாவது குறைபாடு உள்ளமையால் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ வாழ்க்கையின் அத்தியாவசியச் செயல்களை செய்வதை உறுதிப்படுத்த முடியாத குறையே மாற்றுத்திறன் என மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்புச்சட்டம் வரையறுக்கிறது.

மாற்றுத்திறனையுடைய நபர்கள் மாற்றுத்திறனற்ற நபர்களை விட அதிக சமூக பொருளாதார தாக்கங்களை கொண்டுள்ளனர். உலக சனத்தொகையில் 15% அல்லது 1 பில்லியன் மக்கள் மாற்றுத்திறனாளிகளாவர். அதிலும் 80% ஆனோர் வாழ்வது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலாகும்.

இந்நாட்டில் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களில் 20% மாற்றுத்திறனாளிகளாவர். அதிலும் வடமாகாணத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 18,085 பேர் மாற்றுத்திறனிற்கு உள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,786 மாற்றுத்திறனாளிகளாகவுள்ளனர். அவர்களில் 998 பேர் பெண்களாவார்.

மாற்றுத்திறனை ஏற்படுத்தும் காரணிகளாக இயற்கைக் காரணிகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் காரணிகளும் செல்வாக்கு செலுத்துகின்றன. மாற்றுத்திறனின் தன்மையைப் பொறுத்து கண்பார்வையற்றவர்கள், பேசுவதற்க்கு முடியாதவர்கள், அவயவம் துண்டிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர், காதுகேளாதோர், மனநிலை பாதிக்கப்பட்டோர் என வகைப்படுத்தப்படுகிறது.

இலங்கையில் நடைபெற்ற நீண்டகால யுத்தத்திற்கு பின்னர் இலங்கையானது சமூக பொருளாதாரநிலைகளில் பல பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ள நாடாகக் காணப்படுகின்றது.

முப்பது வருடங்களாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த யுத்தம் முடிவுற்றதனைத் தொடர்ந்து பெருமளவானோர் மாற்றுத்திறனிற்குட்படுத்தப்பட்டதுடன், பெருமளவான பௌதிக மற்றும் மனிதவளங்கள் மற்றும் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்தமையானது மக்கள் மீளவும் விருத்தியடைவதில் பலசவால்களை எதிர்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கென சமூக சேவைகள் திணைக்களத்தினால் பல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைவிடவும் அரசசார்பற்ற நிறுவனங்கள், புலம்பெயர் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களாலும் சமூக, வாழ்வாதார மற்றும் உளவியல் ரீதியான சேவைகளை வழங்குகின்றன.

எனினும் கிடைக்கப் பெறும் உதவிச்சேவைகளின் கிடைப்பனவானது மாற்றுத்திறனாளிகளின் அபிவிருத்திக்கும் நல்வாழ்விற்கும் போதுமானதாக இல்லை. எனினும் சமூகசேவைகள் அனைத்து வலுவிழந்த நபர்களுக்கும் கிடைக்கின்றதா?, வாழ்வாதாரம் தொழில்பயிற்சி என்பன வலுவிழந்தோருக்கு ஏற்றவகையில், வலுவிழப்பின் தன்மையைப்பொறுத்து வழங்கப்படுகின்றதா, வாழ்வாதாரம், உதவுதொகைகளின் கொடுப்பனவுத் தொகைகள் போதுமானதா மற்றும் சரியான சமுதாயத்தை அடிப்படையாகக்கொண்ட புனர்வாழ்வு மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதா என்றால் அது கேள்விக்குறியே ஏனெனில் சரியான சமுதாயத்தை அடிப்படையாகக்கொண்ட புனர்வாழ்வு (Community Based Rehabilitation) வழங்கப்பட்டு அதன் மூலம் சரியான அபிவிருத்தி நடைபெற்று இருந்தால் ஏனைய நபர்களைக் காட்டிலும் நலிவுற்ற மாற்றுத்திறனாளிகள் இன்னமும் வறுமையில் இருப்பது ஏன்? அதிலும் பெண்கள் தற்போது அதிகம் வறுமையில் இருப்பது ஏன்? போன்ற வினாக்களும் காணப்படுவதுடன், 1988ஆம் ஆண்டின் இலங்கையின் பொதுநிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனுள்ள நபர்கள் தொழில் செய்யக்கூடிய ஆற்றலும், திறமையும், தகுதியும் இருக்குமானால் உள்வாங்க வேண்டுமெனவும் மாற்றுத்திறனைக் காரணமாகக்காட்டி அவர்களை நிராகரிக்கக்கூடாது எனக்குறிப்பிட்ட பொழுதிலும் இன்னும் அதற்கான செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் சட்டங்களும், உரிமைகளும், கொள்கைகளும் காணப்படுகின்ற பொழுதிலும் அவற்றின் செயற்றிறனானது குறைவாகவே காணப்படுகின்றது. அந்தவகையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்புச்சட்டம்,1996 (இலங்கை அரசாங்கம்), மாற்றுத்திறனாளிகளிற்கான அணுகும்வசதி விதிமுறைகள்(2006) மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பிலான தேசிய கொள்கை(2003) என்பன காணப்படுகின்ற பொழுதும் அவற்றின் செயற்றிறன் என்பது குறைவாகவே காணப்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை மாற்றுத்திறனாளிகள் அதிலும் பெண்மாற்றுத்திறனாளிகளும் அதிகம் பாதிப்புக்களை எதிர்கொள்வதால் அவர்களின் சமூக, வாழ்வாதார, உளவியல் மற்றும் அணுகும்வசதிகள் சரியான வகையில் ஏற்படுத்திக்கொடுக்கப்படுவதுடன், சமுதாயத்தை அடிப்படையாகக்கொண்ட புனர்வாழ்வு, உள்வாங்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியோக அணுகுமுறைகள் இரண்டையும் உள்ளடக்கிய இரட்டைவழி அணுகுமுறையினைப் பயன்படுத்துதல் மற்றும் பெண்மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்த சமூக, வாழ்வாதார செயற்றிட்டங்கள் என்பன முன்னெடுக்கப்படுவதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்கள், உரிமைகள் மற்றும் கொள்கைகள் சரியான வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். என்பதே எம் அனைவரினதும் அவாவாகும்.

Popular

More like this
Related

இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது...

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற...

இந்தோனேசிய ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை சமர்ப்பித்தார் இலங்கை தூதுவர் சஷிகலா பிரேமவர்தன!

இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சஷிகலா பிரேமவர்தன (Sashikala Premawardhane), தனது...

சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு...