நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், நாமல் ராஜபக்ஷ லண்டனில் City University of London பெற்ற சட்டமாணி சான்றிதழில் உள்ள கையொப்பத்தில் சிக்கல் உள்ளது என்றும், சட்டக் கல்லூரி அதை ஏற்கவில்லை என்றும் அமைச்சர் சில ஆவணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
”லண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட சான்றிதழை முதுகலைப் பட்டத்திற்கு பதிவு செய்வதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நாமல் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த பட்டச்சான்றிதழ் செப்டெம்பர் 15, 2009 அன்று வழங்கப்பட்டது, ஆனால் அந்த பட்டச்சான்றிதழில் கையொப்பமிட்ட துணைவேந்தர் ஜூலை 23 அன்று பதவி விலகியுள்ளார். அவர் பதவி விலகிய 54 நாட்களுக்குப் பிறகு, அந்த நபர் துணைவேந்தராக பட்டச் சான்றிதழில் கையொப்பமிட்டுள்ளார்.
இந்த இலண்டன் நிறுவனம் ஒக்டோபர் 15, 2009 அன்று இலங்கை சட்டகல்லுாரியில் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இந்த நிறுவனத்தில் பட்டம் பெற்றதாகக் கூறும் எம்.பி. நாமல், செப்டெம்பர் 25, 2009 அன்று சட்ட கல்லுாரியில் சேர விண்ணப்பித்தார்.
அவர் தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த அதே நாளில் சட்டகல்லுாரி அதை ஏற்றுக்கொண்டது. அந்த நேரத்தில், லண்டன் சிட்டி யுனிவர்சிட்டி சட்ட கல்லுாரில் இருந்து ஒப்புதல் பெறவில்லை. அது ஒக்டோபர் 15 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பட்டச் சான்றிதழில் அவர் மூன்றாம் வகுப்பில் சட்ட இளங்கலை பட்டம் பெற்றுள்ளார், அதாவது மூன்றாம் வகுப்பு பட்டம் பெற்றுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவரை இங்கிலாந்து வழக்கறிஞர் பட்டப்படிப்பில் சேர்க்க முடியாது என்று கூறுகின்றது. மேலும் நான் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்ணியத்தையும், நாடாளுமன்றத்தையும் பாதுகாக்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வழக்கமான முறையில் இதற்கு விளக்கமளிப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும்” அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
