ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சட்டவிரோதமாக கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டையில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு மற்றும் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பதிவாகிய வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தலங்கமவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாகவும் கொழும்பு கோட்டையிலுள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாகவும் நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு போராட்டங்களின் போது வன்முறைகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் அரசாங்கம் மற்றும் பொலிஸாருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த பத்து சந்தேகநபர்கள் மருதானை பொலிஸில் இன்று சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய இலங்கையின் யூ.டியூபர் ரதிது சுரம்யா எனப்படும் ரெட்டா, மாணவர் சங்கத் தலைவர் வசந்த முதலிகே மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் லஹிரு வீரசேகர ஆகியோர் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
அதேபோல ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் லோட்டஸ் வீதியிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.