முஸ்லிம் சமூக விவகாரங்களை ஆழமாக அறிக்கையிட்ட மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜின் மறைவுக்கு முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்!

Date:

கனடாவில் காலமான இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் (வயது 72) அவர்களின் மறைவு குறித்து ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இலங்கையின் மிகச்சிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவராகவும், அரசியல் ஆய்வாளராகவும் மதிக்கப்பட்ட டி.பி.எஸ். ஜெயராஜ் அவர்கள், பல தசாப்தங்களாக நாட்டின் இனப்பிரச்சினை, உள்நாட்டு யுத்தம் மற்றும் சமகால விவகாரங்கள் குறித்து ஆழமான பார்வைகளைத் தனது எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தியவர்.

அவரது துணிச்சலான ஊடகப் பணியும், காத்திரமான அரசியல் பகுப்பாய்வுகளும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பெருவாரியான வாசகர்களின் மதிப்பைப் பெற்றுத்தந்தன.

அவர் கனடாவில் வசித்து வந்த போதிலும், இலங்கை விவகாரங்களை ஆழமாக ஆராய்ந்து தொடர்ந்து எழுதி வந்தார்.

தனது துணிச்சலான எழுத்துக்களுக்காகக் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட அவர், புலம்பெயர் தேசத்தில் வைத்து கொடூரமான முறையில் தாக்குதலுக்கும் உள்ளானார். எனினும், எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது, நேர்மையான முறையிலேயே தனது ஊடகப் பணியை அவர் இறுதிவரை முன்னெடுத்தார்.

குறிப்பாக, முஸ்லிம் சமூக, அரசியல் விவகாரங்களில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டிருந்த அவர், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளைத் தனது பேனா முனையின் மூலம் வெளிக்கொணர்வதில் முக்கிய பங்காற்றினார்.

வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, கிழக்கு மாகாண விவகாரங்கள் மற்றும் நாட்டின் இக்கட்டான காலகட்டங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட இனவாத அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை அவர் தனது கட்டுரைகளில் முன்னிலைப்படுத்தினார். ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலைச் சமூகங்களின் குரலாக ஒலிப்பதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு என்றும் நன்றியுடன் நினைவுகூரத்தக்கது.

தனது தொழில்முறை ஆளுமைக்கு அப்பால், ஊடகத் துறைக்குள் நுழையும் இளம் ஊடகவியலாளர்கள் உட்பட சக ஊடகவியலாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் நண்பராகவும் அவர் விளங்கினார்.

ஊடகத்துறையினர் பலருக்கும் அவர் வழங்கிய வழிகாட்டல்களும், ஊக்கமும், நட்பும் என்றும் மறக்க முடியாதவை.

இந்தத் துயரமான வேளையில், அன்னாரின் மறைவினால் வாடும் அவரது மனைவி, குடும்பத்தினர்கள், நண்பர்கள், சக ஊடகவியலாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அவரது வாசகர்களுக்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...