காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைகளுக்கு ஆயுதங்களை வழங்கும் இந்தியா: சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையில் தகவல்

Date:

-லத்தீப் பாரூக்

இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் இந்திய தனியார் நிறுவனங்கள் அக்டோபர் 2023 முதல் நவம்பர் 2025 வரை, குறைந்த பட்சம் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் இராணுவ பாகங்களை உள்ளடக்கிய 2,596 பொதிகளை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் 42 பக்க விசாரணை அறிக்கையில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பாகங்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்வதை இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதன் அதிகார வரம்பின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் இனப் படுகொலைகள் மற்றும் குற்றங்களுக்கு பங்களிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை மேலும் கூறியுள்ளது.

சகல நிறுவனங்களுக்கும் தங்களது உலகளாவிய செயற்பாடுகளின் போது மனித உரிமைகளை மதிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. இதில் தங்களது தயாரிப்புகள் சர்வதேச சட்டங்களின் கீழ் எந்தவிதமான கடுமையான மீறல்களிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த, முன்கூட்டியே செயலூக்கமான மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்பதும் அடங்கும். இந்த நடவடிக்கைகள் தாங்கள் எதிர்நோக்கும் ஆபத்தின் அளவிற்கு ஏற்ப அமைய வேண்டும்,என்பதும் நியதியாகும்.

அக்டோபர் 2023 க்குப் பிறகு புது டில்லி இஸ்ரேலுக்கு யுத்தப் பாவனைக்கான ட்ரோன்கள், குண்டுகள் மற்றும் ஆயுத கூறுகளை வழங்கியது என்ற முந்தைய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, காசாவில் இஸ்ரேலின் இனப் படுகொலைக்கு இந்தியா பொருள் ரீதியாக ஆதரவளித்துள்ளது என்று குற்றம் சாட்டி வரும் தொடர் அறிக்கைகளின், அணமைக்கால அறிக்கை தான் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளது.

“பல ஆண்டுகளாக கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில், உலகளவில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு நிகழ்வாக காசாவில் நடந்து வரும் இனப் படுகொலைகள் அமைந்துள்ளன. இந்த நிலையிலும் கூட இஸ்ரேலிய இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருவதை எமது ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன” என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் அக்னஸ் கல்லமார்ட் கூறினார்.

சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையின் சில  முக்கியமான அம்சங்கள் வருமாறு;

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை வழங்கும் விடயத்தில், இந்திய அரசு இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையுடன் நெருக்கமான மற்றும் இலாபகரமான, கம்பனிகள் மூலமான வர்த்தக உற​வுகளை எவ்வாறு உருவாக்கியுள்ளது மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை ஆதரிக்கும் விநியோகத் தொடர் சங்கிலிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக அது எவ்வாறு மாறியுள்ளது, என்ற விடயங்களை இந்த அறிக்கை ஆவணப்படுத்தி உள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் காசாவில் பலஸ்தீன மக்கள் மீது பரவலான மரணம், அழிவு மற்றும் துன்பங்களை தொடராக ஏற்படுத்தி வந்தபோது, இந்திய நிறுவனங்கள் இஸ்ரேலின் பாதுகாப்புத் துறைக்கு யுத்த தளபாடங்களுக்கான பாகங்கள் மற்றும் வெடிமருந்துகளை கணிசமாக வழங்கியதன் மூலம் தொடர்ந்து லாபம் ஈட்டி வந்துள்ளன.

அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உட்பட பல முக்கிய நாடுகளில் இருந்து   இடைவிடாத ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை இஸ்ரேல் பெற்று வந்துள்ளது. மேலும், ஸ்லோவேனியா மற்றும் பிரான்ஸ் வழியாகவும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வந்துள்ளன. இவற்றின் மூலமும் இஸ்ரேல் குற்றங்களைப் புரிந்துள்ளதோடு  சர்வதேச சட்டங்களையும் மீறி உள்ளது என்பதையும், சர்வதேச மன்னிப்புச் சபை ஆவணப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்துக்கு விநியோகங்களை மேற்கொள்ளும், அந்த நாட்டின் மிகப் பெரிய உள்ளூர் நிறுவனங்களுக்கு இந்திய ஆயுதங்கள், வெடிமருந்துகள், உதிரிப் பாகங்கள் மற்றும் முக்கிய பாகங்கள் எவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன என்பதையும், இந்த அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது.

இந்த விடயத்தை உறுதிப்படுத்த, இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஏற்றுமதி வர்த்தக அளவு தரவுகளை இந்த அறிக்கை பயன்படுத்தி உள்ளது.  இந்திய அரசுக்கு நேரடியாக சொந்தமான நிறுவனங்களும் மற்றும் இந்திய அரச கட்டுப்பாட்டு நிறுவனங்களும் இந்த அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த ஆயுத விநியோகங்கள், இராணுவ தொழில்நுட்பம், பாகங்கள் மற்றும் உபகரணங்களின் நேரடி மற்றும் மறைமுக பரிமாற்றம் என்பன சர்வதேச சட்டங்களை கடுமையான விதத்தில் மீறும் செயல்களாகும்.  இவற்றை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இஸ்ரேல் மீது விரிவான ஆயுதத் தடைகளை விதிக்க வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.

இதனிடையே, காசாவில் பட்டினி, அதிகரித்து வரும் மரணங்களின் எண்ணிக்கை, என்பன குறித்த சீற்றம் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருவதால், இஸ்ரேலுக்கான ஆயுத பரிமாற்றங்களை நிறுத்துமாறு இந்தியாவில் உள்ள சமூக செயற்பாட்டு ஆர்வலர்களைக் கொண்ட குழுக்கள், அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

மனிதாபிமான ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் முக்கிய பிரஜைகள் இது சம்பந்தமாக நீதிமன்றங்களில் மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர். சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறும் விடயத்தில் இந்தியா, இஸ்ரேலுக்கு உடந்தையாக இருக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்து திறந்த மடல்களையும் பலர் எழுதி உள்ளனர்.   இந்திய தொழில் சங்கங்களின் மையம் (சிஐடியு) போன்ற தொழில் சங்கங்கள், இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் இராணுவப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், கொண்டு செல்வதற்கும் பகிரங்கமாக எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

மேலும் இந்தியா 20,000 தொழிலாளர்களையும் இஸ்ரேலுக்கு அனுப்பி உள்ளது. காசா மீதான போரை இஸ்ரேல் தொடங்கியது முதல், அங்கு கட்டிட நிர்மாணப் பிரிவில் பலஸ்தீன தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனை ஈடு செய்யவே பல்லாயிரக்கணக்கான இந்திய தொழிலாளிகள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விடயத்தில் இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு, இந்தியாவில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்கள் தங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்திய தொழில் சங்கங்கள் சார்பாக வெளியிடப்படுள்ள ஒரு திறந்த கடிதத்தில், “இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதாக கூறப்படுவதை விட, இந்தியாவுக்கு ஒழுக்கக்கேடான மற்றும் பேரழிவு தரும் விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய ஆயுத நிறுவனங்களுடனான எல்லா விதமான பரிவர்த்தனைகளையும் நிறுத்திக் கொள்ளுமாறும் புது டில்லிக்கு இந்திய ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இந்தக் கோரிக்கைகளை அலட்சியம்செய்யும் வகையில் இனப் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டி, சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக, தென்னாபிரிக்கா தொடுத்த வழக்கில் இணைந்து கொள்ள புது டில்லி மறுத்துவிட்டது. மேலும் இஸ்ரேல் மீது ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என்ற அழைப்புக்களையும் இந்தியா நிராகரித்துள்ளது.

இந்தியாவுக்குள் பலஸ்தீன சார்பு போராட்டங்கள் மற்றும் எல்லா வகையான பலஸ்தீன ஆதரவு செயல்பாடுகளையும் இந்திய அரசு தடுத்து வைத்துள்ளது. இந்தியாவுக்குள் உள்ள மனித உரிமைகள் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள், இஸ்ரேலுடனான ஏற்றுமதி உரிமத்தை நிறுத்துமாறு அரசாங்கத்துக்கு மனு அளித்துள்ளனர்.

தொடர்ந்து இடம்பெற்று வரும் வர்த்தக பரிமாற்றங்கள் சர்வதேச சட்டக் கடமைகளை மீறுவதாக அவர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் யுத்தக் குற்றவாளியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் தலைமையின் கீழ் கடந்த பத்தாண்டுகளில் இந்தியா-இஸ்ரேல் உறவுகள் முன்னொரு போதும் இல்லாத வகையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான அவர்களின் பொதுவான விரோதம் அவர்களின் பிணைப்பை மேலும் இறுக்கமாக வலுப்படுத்துகின்றது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் மோடியின் உயர்மட்ட இஸ்ரேல் விஜயம், ‘பாசிசத்தைத் தழுவுதல்’  என்று சர்வதேச ரீதியாக வர்ணிக்கப்பட்டது. இந்த விஜயம் தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்கது என்றும் விவரிக்கப் பட்டது. மோடியின் இஸ்ரேல் விஜயத்தின் போது, இரு நாடுகளும் சமாதானம், புதிய கண்டு பிடிப்புக்கள் மற்றும் சுபீட்சம் என்பனவற்றை வலுப்படுத்தும், சிறப்பு மூலோபாய உறவுகளையும் மேம்படுத்திக் கொண்டன.

இஸ்ரேலுக்காக அதன் முக்கிய வான்வழி பாதுகாப்புத் திட்டமான அயர்ன் டோம் இடைமறிப்பு ஏவுகணைகளை இந்தியா உற்பத்தி செய்வது குறித்த விவாதங்கள் உட்பட, தொடர்ச்சியான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் சாத்தியமான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் பற்றிய பிரகடனங்களுடன் இந்த உறவு மேலும் விரிவடைந்துள்ளது.

இந்தியா 1950 இல் இஸ்ரேலை அங்கீகரித்தது. ஆனால் 1992 வரை முழு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. பலஸ்தீன மக்களை வெளியேற்றியதன் மூலம், சியோனிசம் ஒரு இன ரீதியான தேசிய அரசை உருவாக்கியுள்ளது என்பதையும்,  இஸ்ரேல் முதலில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு காலனித்துவ சக்தியுடனும் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்திய சக்தியுடனும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது என்பதையும் இந்தியத் தலைவர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.

மோடியின் தலைமையின் கீழ், இந்தியா இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவுகள், இனி ஒருபோதும் நிறுத்தப்படப் போவதும் இல்லை. ஓரளவு ஆயுதங்கள் இப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டும் வருகின்றன. அதேவேளை பல இந்திய நிறுவனங்கள் இஸ்ரேலின் இராணுவ உற்பத்தி தொழில்துறை வளாகங்களை போஷித்தும் வருகின்றன.

பலஸ்தீனத்தை ஆதரித்துக் கொண்டு இஸ்ரேலுடனான நட்பினையும் பேணிக் கொள்ள முடியும் என்று பல தசாப்தங்களாக, இந்திய அதிகாரிகள் நம்பி வந்துள்ளனர். அதற்கான தொடர் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு வகையான மாயத் தோற்றம். அந்தத் தோற்றத்தை அதிகாரபூர்வமாக பாதுகாத்துக் கொள்ளவும் இந்தியா முயன்று வருகின்றது. ஆனால் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை, அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும், வலுவிழந்ததாகவும் ஆக்குகின்றது.

கிடைக்கப் பெறும் பதிவுகள் மற்றும் தரவுகள் என்பன ஒரு கடினமான உண்மையைச் சொல்லுகின்றன. மோடி அரசாங்கம் இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவை அரசியல் இணைப்புக்கு அப்பால் எடுத்துச் சென்று, இஸ்ரேலின் குற்றங்களில் உடந்தையாக இருக்கக் கூடிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்பதே அந்த கசப்பான யதார்த்தமாகும்.

ஒரு இனப்படுகொலை ஆட்சிக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது என்ற தலைப்பில், இந்திய அரசியல் பொருளாதார நிபுனரும், அரசியல் விமர்சகருமான பிரபாத் பட்நாயக் எழுதி உள்ள ஒரு ஆக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உண்மையில் காசாவில் இஸ்ரேலால் பயன்படுத்தப்பட்டன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காசாவில் நுசீராட் என்ற இடத்தில் உள்ள ஐ. நா. நடத்தும் பள்ளியில், இடம்பெயர்ந்த பலஸ்தீனர்களுக்கு அடைக்கலம் அளிக்கப் பட்டிருந்தது. அதன் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏவுகணைத் துண்டுகளில் “இந்தியாவில் தயாரிக்கப்பட்டது” என்று பெயரிடப்பட்டிருந்தது.

நுசீராட்டில் உள்ள ஒரு பாடசாலையில் தஞ்சம் புகுந்த, 33 பலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் இந்திய ஆயுதங்கள் இஸ்ரேலால் பயன்படுத்தப்பட்டன என்ற உண்மை, இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

இது சர்வதேச நீதிமன்றத்தின் தற்காலிக உத்தரவை மீறிய ஒரு இனப் படுகொலைச் செயலாகும். இது இனப் படுகொலையில் உடந்தையாக இருந்ததற்காக இந்தியாவை சட்டப்பூர்வமாக குற்றவாளியாக்கும் நிலையையும் உருவாக்கி உள்ளது. எனவே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, அது சட்டத்தில் இருந்தும் தப்ப முடியாது. உலக நாடுகள் மத்தியில், மிகப் பெரிய அளவில், இஸ்ரேலிய ஆயுதங்களை வாங்கும் நாடாக இந்தியா உள்ளது. மேலும் பல இஸ்ரேலிய ஆயுத உற்பத்தியாளர்கள் இந்திய நிறுவனங்களுடன், கூட்டு முயற்சிகள் மூலம், இந்தியாவில் உற்பத்தி வசதிகள் பலவற்றையும் நிறுவியுள்ளனர்.

இந்த உறவுகளின் மையமாக இந்தியாவின் அதானி குழுமம் உள்ளது என்று, “ பகைமை தேசங்கள் : இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான புதிய கூட்டணி” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆசாத் எஸ்ஸா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழுமம் துறைமுகங்கள் முதல் விமான நிலையங்கள் வரை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதல் எரிவாயு வரை, தரவு மையங்கள் முதல் ஊடகங்கள் வரை, வணிகங்களைக் கொண்ட ஒரு பரந்து விரிந்த இந்திய வர்த்தக சாம்ராஜ்ஜியமாகும்.  இந்தியாவின் இரண்டாவது பணக்காரரான கௌதம் அதானி தலைமையில், இந்த குழுமம் அண்மைக் காலங்களில் ஆக்ரோஷமாக விரிவடைந்துள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சாதகமான பல வணிக ஒப்பந்தங்களில் அண்மைக் காலங்களில் கையொப்பம் இடப்பட்டுள்ளன.  அதானிக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபட்டதாக மோடி மீது அடிக்கடி குற்றச் சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டில் அதானி, இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸுடன் இணைந்து ‘ஹெர்ம்ஸ் 900’ ட்ரோன்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கினார். இதற்கென  ஹைதராபாத்தில் ஒரு உற்பத்தி வளாகத்தையும் அவர் நிறுவினார். பலஸ்தீனர்களுக்கு எதிரான தாக்குதல்களில் எல்பிட் சிஸ்டம்ஸ் ஆயுதங்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டன. இதனால் இந்த நிறுவனம் பலஸ்தீனர்களுக்கு எதிரான போர்க் குற்றங்களில் உடந்தையாக இருந்ததாக பரவலாக அறியப்படுகின்றது,

மேலும் அதன் கண்காணிப்பு அமைப்புகள் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதிகளில் சுவர்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் பயன்படுத்தப் படுகின்றன. அதன் வளாகங்கள் சர்வதேச அளவில் நேரடி நடவடிக்கைகளின் இலக்குகளாகவும் இருந்து வருகின்றன.

ஹைதராபாத்தில் இடம்பெற்ற ஒரு ஊடக சந்திப்பில் இந்திய இஸ்ரேல் பிரதமர்கள் கட்டித் தழுவிக் கொண்ட போது எடுக்கப்பட்ட படம்.

பெங்களூரில் இடம்பெற்ற பலஸ்தீன ஆதரவுபோராட்டம் ஒன்றில் பங்கேற்ற மக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலரை வழங்கும் மனிதாபிமான உதவிக்கு அமைச்சரவை அனுமதி!

வடக்கு நேபாளத்தின் ரகுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட கடுமையான...

தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மஹிந்த தேசப்பிரியவுடன் விசேட புத்திஜீவித்துவ கலந்துரையாடல்!

'நல்லிணக்கம் மற்றும் சமய நல்லிணக்கத்தில் சமகால நிலை' தற்போதைய போக்குகள் என்ற...

அடுத்த கட்டத்தை எட்டியது ‘மக்கா ஒப்பந்தம்’: சவூதியில் அமைகிறது நிரந்தர செயலகம்!

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கியே ஆகிய மூன்று நாடுகளும் தங்கள்...