இன்றும் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த “அர்னாப்” (Arnab) என்ற பாரிய புயலானது, ஒரு மிகத் தீவிர புயலாக வலுவடைந்து, இன்று, ஒக்டோபர் 27ஆம் திகதி அதிகாலை 02.30 மணிக்கு வட அகலாங்கு 15.50 N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 85.40 E இற்கும் அருகில் காங்கேசன்துறைக்கு வடகிழக்காக சுமார் 890 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இது ஒக்டோபர் 27ஆம் திகதி பிற்பகல் 05.30 மணி வரை தொடர்ந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து, அதன் பின், பெரும்பாலும் வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், ஒக்டோபர் 28 ஆம் திகதி முற்பகல் 11.30 மணியளவில் ஒரு மிகத் தீவிர புயலாக இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் ஊடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இத் தொகுதியால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் எதுவும் ஏற்படாது என்றாலும், இத் தொகுதியுடன் தொடர்பான காற்று வீச்சு நாட்டுக்குக் குறுக்காகப் பரவுவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.