நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமி மற்றும் குழந்தையின் நலன்புரி மற்றும் கல்வி உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த சிறுமி மற்றும் குழந்தையின் நலன்புரி மற்றும் கல்வித் தேவைகளுக்காக மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘அர்த்த’ (Artha) வேலைத்திட்டத்தின் ஊடாக இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
15 வயதுடைய குறித்த சிறுமி தற்போது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில், பரீட்சைக்குத் தயாராவதற்குத் தேவையான உளவியல் மற்றும் சமூக ஆலோசனை உதவிகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த சிறுமியின் கட்டாயக் கல்வி வயது நிறைவடையும் வரையிலோ அல்லது அவரது விருப்பத்திற்கமைய உயர்கல்வி அல்லது தொழிற்கல்வியைத் தொடரும் வரையிலோ இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அத்துடன், குழந்தையின் போஷாக்கு மற்றும் கல்வித் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அந்தக் குழந்தைக்கும் ‘அர்த்த’ கொடுப்பனவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘அர்த்த’ வேலைத்திட்டத்தின் கீழ், இதுவரை சுமார் 9,000 சிறுவர்கள் நன்மைகளைப் பெற்று வருகின்றனர்.
மேலும், 2027ஆம் ஆண்டிலும் இவ்வேலைத்திட்டத்தைத் தொடர்வதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 750 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.