தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றையதினம் (21) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.வடக்கு மாகாணத்திலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்குத் திசையிலிருந்து காற்று வீசக் கூடும்.
காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் மற்றும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிள் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் மற்றும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையிலும் மற்றும் கொழும்பிலிருந்து காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
