சிங்கக் கொடியை தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்வதில் இருந்த போட்டி-விக்டர் ஐவன்!

Date:

ஜே.வி.பி மற்றும் ஹெல உறுமய என்பவற்றை சிங்கள பௌத்த உரிமைகளை பாதுகாப்பதற்காக போட்டியிடும், இலங்கையின் சிங்கள கருத்தியல் தளத்தை பிற்போக்குத்தனமாக்குவதில் பங்களிப்பை வழங்கிய, சிங்கள பௌத்த இனவாதத்துக்கு, விடுதலை மற்றும் போராட்ட வடிவம் வழங்கிய,இலங்கையின் நன்மைக்கு ஏதுவாகக் கூடிய மெய்யான மறுசீரமைப்புகள் நிகழ்வதைத் தடுத்த, சம்பிரதாய அரசியல் கட்சிகளைவிட மாற்றமான சிங்கள சமூகத்தின் அடக்கப்பட்டவர்களுக்காக வேர் பரப்பிய போராட்டக் குணம் நிரம்பிய அதே நேரம் பிற்போக்குவாத இரண்டு அரசியல் முகாம்களாக நான் ஒரு காலத்தில் இனம் கண்டிருந்தேன். சிங்கக் கொடியை தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்வதில் இந்த இரண்டு அமைப்புகளுக்கும் இடையில் ஒரு காலத்தில் பாரிய போட்டி நிலவியது. அக்கொடியின் குறிப்பிடத்தக்க ஒரு பங்கு அனுரகுமாரவின் கையில் இருந்ததுடன் எஞ்சிய பங்கு சம்பிக ரணவக்க கையில் இருந்தது. கடைசியில் மஹிந்த ராஜபக்ஷ அக்கொடியின் ஏக உரிமையாளராக மாறிப்போனதுடன் அச்செயற்பாட்டினுள் பறித்தெடுத்தல் மற்றும் விருப்பத்துடன் கையளித்தல் ஆகிய இரண்டு நிகழ்வுகளும் உள்ளடங்கியிருந்ததாக கூறலாம். இந்த இரண்டு தரப்பினரும் மஹிந்த ராஜபக்‌ஷவை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியிருந்தனர். இந்த இரண்டு தரப்பினரும் இல்லாது போயிருந்தால் பிரபாகரனின் பகிஷ்கரிப்பு இருந்த நிலையிலும் 2005 தேர்தலின் போது மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியுற நேர்ந்திருக்கும்.

சிங்கக் கொடிக்கான போட்டி

மஹிந்த ஜனாதிபதியாகி அவர் தனது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டதன் பின்னர் ஜே.வி.பி.யானது ராஜபக்‌ஷ நிர்வாகத்துடன் பேணிவந்த கூட்டணியிலிருந்து அவசரகதியில் வௌியேறியது. அதற்கு மாற்றமாக சம்பிக்கவின் ஹெல உறுமய அந்த அரசாங்கத்தில் இருந்து 10 ஆண்டுகளின் பின்னரே வௌியேறியது. அதன் பின்னர் ஏராளம் மாற்றங்கள் நிகழ்ந்ததுடன் 2015ல் தோல்வியுற்ற மஹிந்தவுக்குப் பதிலாக 2019 கடைசியில் கோட்டாபய அதிகாரத்துக்கு வந்து மஹிந்த கையில் இருந்த சிங்கக் கொடி கோட்டாபயவின் கைக்கு மாறியது. அது இப்போது அவர் கையிலிருந்து நழுவும் நிலையில் உள்ளது. அவ்வாறு அவரது கையில் இருந்து நழுவப் போகும் சிங்கக் கொடியை தனது உரிமையாக்கிக் கொள்ளும் ஆசையொன்று அனுர குமாரவுக்குள் உருவாகி அவர் அந்த நோக்கத்தை அடைந்துக் கொள்வதற்காக அதற்குப் பொருத்தமான ஆடையை மாற்றிக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. அத்துடன் அவர் மற்றும் அவரது இயக்கம் தொடர்பில் நேர்மையாகவோ முகஸ்துதிக்காகவோ ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருந்த பன்முகத்தன்மை குணவியல்புகளை விரைவில் கைவிட நேரிடலாம். மிகவும் ஆச்சரியப்படத்தக்க விடயம் யாதெனில் சம்பிக அதற்கு மாற்றமாக 2015ம் ஆண்டில் தேர்ந்தெடுத்துக் கொண்ட அதே வழியில் அதற்கு சற்று மாற்றமான முறையில் பயணிப்பதற்கு மனதை திடப்படுத்திக் கொண்டுள்ளதாகும். அவரது கியர் மாற்றம் மற்றும் அதிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் நேர்மையானவையா இல்லையா என்பதை இப்போதே கூற முடியாது. நாட்டின் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் தோல்வியுற்றுள்ளமை நாட்டின் எதிர்கால தலைமைத்துவத்துக்கு மோப்பம் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த இரண்டு தலைவர்களுக்கும் பொதுவான இயல்பாக குறிப்பிடலாம்.

சம்பிக தனது கண்காட்சியை நடத்துவதற்காக அனுர குமார தனது கண்காட்சியை எந்த மண்டபத்தில் நடத்தினாரோ அதே மண்டபத்தையே தேர்ந்தெடுத்திருந்தார். அனுரகுமார, தேசிய மக்கள் சக்தி கண்காட்சியை வண்ணமயப்படுத்தும் குழுவாக ஜே.வி.பி.யை பயன்படுத்திக் கொண்ட அதே வேளை சம்பிக்க அதற்காக 43ம் படையணியை பயன்படு்த்தியிருந்தார். அனுரகுமார தனது உரைக்கு மேலதிகமாக “நெருக்கடியை வெற்றிகொள்ள துரிதமானதொரு வழிமுறை” என்ற பெயரில் சிறு கையேடு ஒன்றையும் வௌியிட்டிருந்தார். சம்பிக்கவும் தனது உரைக்கு மேலதிகமாக நெருக்கடி மற்றும் அதனை வெற்றிகொள்வதற்கான வழிமுறை குறித்து விளக்குவதற்காக “உயர்வோம், உயர்த்துவோம் எனும் பெயரில் சிறு நூல் ஒன்றை வௌியிட்டிருந்தார். இந்த இரண்டு கண்காட்சிகளிலும் வௌிப்புற தோற்றத்தைப் பொறுத்து கூடுதல் மதிப்பெண்கள் அனுரகுமாரவின் கண்காட்சிக்கே வழங்கப்பட வேண்டும். இரண்டு தலைவர்களின் உரைகளிலும் சம்பிக்கவின் உரையானது மிகவும் கருத்தாழம் கொண்டதும் அர்த்தபுஷ்டியானதாகவும் இருந்தது. அனுரகுமாரவின் முயற்சியானது இலங்கையை மீட்டெடுப்பதற்கான ஆற்றல் தமக்கும் தமது கட்சிக்கும் மாத்திரமே உள்ளது என்று சித்தரித்து நாட்டை தம்மிடம் கையளிக்குமாறும் நாட்டைப் பொறுப்பேற்க தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுக் கூறுவதுமாக இருந்தது. சம்பிக அதற்கு மாற்றமாக நெருக்கடியை வெற்றிகொள்வதற்காக பரந்து பட்ட தேசிய இணக்கப்பாடு மற்றும் அதற்காக ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றின் அவசியம் குறித்தும் உரையாற்றியிருந்தார். குறித்த இரண்டு வழிமுறைகளில் சம்பிகவின் வழிமுறையானது விரிவானது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரைத் தோற்கடிக்கும் பிரச்சினையானது நாடு தற்போதைக்கு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியை விட சிறு பிரச்சினையாகவே கருதலாம். அவ்வாறிருக்கையிலும் மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்கும் பிரச்சினையை வெற்றிகொள்வதற்காக 2010ல் நேரடியாக பொது முன்னணி மற்றும் பொது வேட்பாளர் ஒருவருக்காகவும் மீண்டும் 2015ல் பொது வேட்பாளர் ஒருவருக்காக மறைமுகமாகவும் செயற்பட்டார்கள். மஹிந்தவைத் தோற்கடிப்பதற்காக தேசிய முன்னணியொன்று தேவைப்பட்ட ஜே.வி.பி.யினருக்கு மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிப்பதை விட பல்லாயிரம் மடங்கு பாரியதான நெருக்க்டியாக கருதத்தக்கதும் நாடு எதிர்கொண்டுள்ளதுமான நெருக்கடியாக கருதத்தக்கூடிய நெருக்கடியை தீர்ப்பதற்காக பொது இணக்கப்பாடு ஒன்றுக்குப் பதிலாக தனிக் கட்சியாக செயற்பட சிந்திக்கிறது.

யுகமொன்றின் முடிவு

சம்பிக முன்வைக்கும் தீர்வு குறித்து கதைப்பதற்கு முன்னர் பாரிய நெருக்கடியொன்றுக்குள் மூழ்கிப் போயுள்ள இந்த தீர்க்ககரமான சந்தர்ப்பத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் இயக்கங்கள் குறித்து நான் முன்வைக்கும் விமர்சனங்களின் நோக்கம் என்னவென்பது குறித்து விளக்கமளிப்பது முக்கியம் என்று நம்புகின்றேன். நான் அவர்களின் போட்டியாளர் அல்லவென்பதுடன் அதிகார நோக்கிலான அரசியல் இயக்கமொன்றின் பங்காளரும் அல்ல. விமர்சனங்களை முன்வைப்பதும் அவர்களை அழிக்கும் நோக்குடன் அன்றி அவர்களின் அரசியல் பயணத்தை செப்பனிடுவதற்காகவேயாகும். நாம் தற்போது முகம் கொடுக்க நேர்ந்துள்ள நெருக்கடியானது செயற்பாட்டு ஆற்றல் மூலமாக மட்டும் வெற்றி கொள்ளக் கூடிய நெருக்கடி அல்ல. அதற்காக சிந்தனைத் தௌிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். விடயங்களை ஆராய்ந்து உணர்ந்து, அவற்றை கலந்துரையாடல் மற்றும் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்படுத்துவதன் ஊடாகவே அதனை அடையலாம். அதற்குப் பொருத்தமான கருத்தியல் ரீதியான பின்புலம் ஒ்ன்றை உருவாக்கிக் கொடுப்பதற்கான முயற்சியையே நான் மேற்கொண்டுள்ளேன்.

நல்லதற்கோ கெட்டதற்கோ ஒரு யுகம் முடிவுற்று இன்னொரு யுகத்தின் விடிவு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தச் செயற்பாட்டுக் களத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள விருப்பமின்றிய தீவிரச் சார்புடைய அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி அரசியல் இயக்கங்களும் அழிவடைந்து போகப் போகின்றது. எனது கருத்துப் படி இந்த நெருக்கடியானது நல்ல முறையிலோ அல்லது மோசமான முறையிலோ முடிவுக்கு வரும்போது பழைய அரசியல்வாதிகளில் ஒருசிலர் மட்டுமே தாக்குப் பிடிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அந்த நியதி அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானது. அதன்போது அரசியல் களத்தின் பெரும்பகுதி புதிய அரசியல் தலைவர்கள் மட்டும் அரசியல் இயக்கங்களினால் நிரம்பியிருக்கும். அவர்களினதும் வெற்றி, தோல்வியானது துணிச்சலாக தீர்மானங்களை எடுக்கும் ஆற்றல், நேர்மை மற்றும் முதிர்ச்சி போன்ற காரணிகளிலேயே தங்கியுள்ளது. சிலுவை யுத்தமானது ஐரோப்பாவின் இறுதியான மதம் சார் யுத்தமாக இருந்தது போலவே இலங்கையில் மதம், இனம் என்பவற்றின் அடிப்படையில் நடைபெற்ற கடைசித் தேர்தலாக 2019ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் என்பன இருக்கும். இதன் பின்னர் பெரும்பான்மை இனம் அல்லது பெரும்பான்மை மதம் என்பவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஒன்றை எந்தவொரு கட்சியும் வெற்றி கொள்ள முடியாது என்பதுடன் இனி வரும் காலங்களில் இலங்கையில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்கள் மற்றும் கட்சிகளாக அங்கீகரிக்கப்படவுள்ளவை ஒரு இனம் அல்லது மதத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாத, அனைத்து மதங்கள், அனைத்து இனங்களுக்கும் பேதங்கள் இன்றி சமஉரிமைகள் மற்றும் சமமான மானிட கௌரவரம் உள்ள மனிதர்களாக அங்கீகரித்து செயற்படும் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகள் மட்டுமேயாகும். அந்தத் தகுதிகளிலும் அனுர மற்றும் சம்பிக ஆகியோர் குறித்த தகுதியைக் கொண்டவர்களாக அன்றி, அத்தகுதியைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.

இனி நாம் சம்பிகவின் வேலைத்திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து அலசிப் பார்க்கலாம். கடன் நிலுவைத் தொகையை மீளச் செலுத்தல் தொடர்பான நெருக்கடிக்கான முன்மொழிவுகள் சரியானவையாகும். சிந்தனைத்திறன் கொண்ட எந்தவொரு ஆட்சியாளரும் இதற்கு முன்னர் நிலுவைத் தொகை பாக்கி தொடர்பில் இலங்கையின் பல்வேறு ஆட்சியாளர்களும் அந்த நெருக்கடியை தீர்த்துக் கொண்டது போன்றே அதற்கு சமமான முறையில் சம்பிகவின் முன்மொழிவுகளும் அமைந்துள்ளன. சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாரிய சீர்குலைவு மற்றும் அதற்கான தாக்கம் செலுத்திய மோதல் தொடர்பான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட இனம், குலம், மதப் பிரச்சினைகள் இலங்கையின் நெருக்கடியை தீவிரப்படுத்தியதை, தொடர்ந்தும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினையாக அதனை ஏற்றுக் கொள்ளவோ அல்லது அதனை ஏற்றுக் கொள்ளவோ சம்பிக தயாரில்லை என்பது தௌிவாகின்றது. “உயர்வோம், உயர்த்துவோம்” என்ற நூலோ அல்லது ஆவணமோ சம்பிக எழுதியதோ அல்லது அவரது கருத்துக்கள் கொண்ட நூல் அல்லது ஆவணமாக கருதப்பட்டால் அதில் அவர் கூறும் விடயம் யாதெனில், “போர் முடிந்துவிட்டது. ..போர்க்காலத்தில் உண்டான ஆவேசங்கள், வேதனைகள், பகைமை உணர்வுகள் மட்டுமன்றி ஒருசில கோட்பாடுகள் மற்றும் உரையாடல்கள் கூட ” தற்கால சமூகத்துக்குப் பொருத்தமற்றது என்பதாகும்.

சிறுபான்மையினரை புறம் தள்ளி செயற்படல்

நாம் வடக்கின் தமிழர் பிரச்சினையை ஒரு கணம் மறந்துவிடுவோம். பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முஸ்லிம் மக்கள் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் பகைமை மற்றும் வெறுப்பை உருவாக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை பல்வேறு முறைகளில் முன்கொண்டு செல்லப்படும் முஸ்லிம் விரோத துன்புறுத்தல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படாத நிலையிலும் நாட்டின் நன்மை கருதி முஸ்லிம் மக்கள் அந்த துன்புறுத்தல்களை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன் அவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்கள் அனைத்தையும் மறந்துவிட வேண்டும் என்று சம்பிக நினைக்கின்றாரா? தமிழ் மக்களுக்கு உரித்தான மொழி உரிமையை அநியாயமாக நீக்கியதன் மூலம் பாரியளவிலான மானிட கௌரவ இழப்பை அவர்களுக்கு ஏற்படுத்தியதன் காரணமாகவும் ஒரே தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் போராடி இறுதியில் அவர்களுக்கு எதிராக 1983ம் ஆண்டின் ஜூலைக் கலவரத்தில் கொடூரமானதும் பயங்கரமானதுமான இன்னல்களை விளைவித்தமை காரணமாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தங்கள் கௌரவம், உரிமைகளைப் பெற்றுக் கொள்ள போராடும் நிலைக்குத் தள்ப்பட்டனர். 83ம் ஆ்ண்டு கறுப்பு ஜூலைக் கலவரத்துக்கு முன்னரே வடக்கில் ஒரு சில ஆயுதக்குழுக்கள் தோன்றியிருந்த போதும் அவற்றுக்கு தமிழ் மக்கள் மத்தியில் எந்தவித வரவேற்பும் கிடைத்திருக்கவில்லை.

விக்டர் ஐவன்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...