கடுமையான நிதிப் பற்றாக்குறை காரணமாக ஐநா சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) தனது நிவாரணப் பணிகளை சுமார் மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துள்ளதை அடுத்து, காஸாவில் அரை மில்லியன் (5 லட்சம்) பாலஸ்தீனர்கள் தங்களுக்குக் கிடைத்து வந்த முக்கியமான உணவு உதவிகளை இழந்துள்ளனர்.
காஸாவில் சுமார் 1.4 மில்லியன் மக்கள் கடுமையான பசி மற்றும் உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ள நிலையிலேயே இந்த உதவி வெட்டுக்கள் அமலுக்கு வந்துள்ளன.
செப்டம்பர் மாதத்தில் 1.6 மில்லியனாக இருந்த உணவு மற்றும் பண உதவி பெறுவோரின் எண்ணிக்கை, அக்டோபர் மாதத்தில் 1.1 மில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டு வந்த உணவுப் பொட்டலங்களின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தினமும் வழங்கப்பட்டு வந்த 250,000 சூடான உணவுகளின் எண்ணிக்கை 150,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
சுமார் 75,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பண உதவிகளும் குறைபட்டுள்ளன.
காஸா மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலையின்றி தவித்து வரும் நிலையில், சுமார் 200,000 பாலஸ்தீனர்கள் தீவிர உணவுப் பாதுகாப்பற்ற அவசர நிலையை எதிர்நோக்கியுள்ளதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதிகளில் தனது மனிதநேயப் பணிகளை மார்ச் 2027 வரை தடையின்றித் தொடர்வதற்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர் உடனடியாகத் தேவைப்படுவதாக ஐநா முகவாண்மை தெரிவித்துள்ளது.
மேலும் நிதியுதவிகள் கிடைக்கத் தவறினால், உணவுப் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள சிறிய முன்னேற்றங்களும் தலைகீழாக மாறி, மேலும் பல குடும்பங்கள் பட்டினிக்குத் தள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
