கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரத்தில் ‘காஷ்மீர் கருப்பு தினம்’ அனுஷ்டிப்பு.
கொழும்பிலுள்ள இஸ்லாமியக் குடியரசான பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகரகம், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை பல தசாப்தங்களாக மறுக்கப்பட்டு வருவதைக் குறிக்கும் வகையில், ‘காஷ்மீர் கருப்பு தினத்தை’ முன்னிட்டு இன்று கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சியை நடத்தியது.
இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள பாகிஸ்தானிய சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் காஷ்மீரின் நண்பர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.
காஷ்மீரி மக்களுக்கு பாகிஸ்தானின் உறுதியான ஆதரவை வலியுறுத்தும் பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செய்திகள் வாசித்துக்காட்டப்பட்டன.
இந்தக் கருத்தரங்கில் திரு. ஷிராஸ் யூனஸ் உரையாற்றினார். இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பிலுள்ள ஜம்மு-காஷ்மீரில் நிலவும் மோசமான மனித உரிமைச் சூழல் மற்றும் அத்துமீறல்கள் குறித்து விளக்கமளித்தார்.
1947 ஆம் ஆண்டில் சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டதே தற்போதைய துயரங்களுக்கும் மூலக்காரணம் என்று சுட்டிக்காட்டிய திரு. யூனஸ், இப்பகுதி “உலகிலேயே மிகப்பெரிய சிறைச்சாலையாக” மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள், சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் மக்களின் சகிப்புத்தன்மைக்கும் நியாயமான போராட்டத்திற்கும் மரியாதை செலுத்தியதோடு காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான பாகிஸ்தானின் நிலையான தர்ம, அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
காஷ்மீரி மக்களின் விருப்பங்களுக்கும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களுக்கும் அமைவாக காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பிலுள்ள ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்து சர்வதேச சமூகம் மென்மேலும் விழிப்புணர்வு அடைந்து வருவதாகவும், இனிமேலும் அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு வரலாற்று பின்னணியையும், ஜம்மு-காஷ்மீரில் நீண்டகாலமாக நீடிக்கும் மோதல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும் வெற்றிகரமாக வெளிப்படுத்தியது.

