இலங்கை காதி நீதிபதிகள் மன்றத் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் எம். இஃப்ஹாம் யெஹியா!
இலங்கை காதி நீதிபதிகள் மன்றத்தின் (SLQJF) தலைவராகப் பதவியில் உள்ள மொஹமட் யெஹியா மொஹமட் இஃப்ஹாம், தனது மூன்று வருட பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு, எதிர்வரும் 2026 டிசம்பர் 31 ஆம் திகதி முதல் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அத்துடன், வரவிருக்கும் தேர்தலில் எந்தவொரு பதவிக்கும் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
2023 டிசம்பர் மாதத்தில் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட அவர், காதி நீதிபதிகளுக்கான பல பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளார். குறிப்பாக, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் (MMDA) தமிழ் மொழிப் பதிப்பு வெளியீடு, சட்டத் தீர்ப்புத் தொகுப்புகள் மற்றும் ஒழுக்கவியல் வழிகாட்டல்கள் போன்ற ஆவணங்களைப் பகிர்வதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தனது தலைமைத்துவக் காலப்பகுதியில் எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனங்களிடமிருந்தும் நிதி வசூலிக்கப்படவில்லை எனவும், அனைத்துச் செலவுகளையும் சம்பந்தப்பட்டவர்களே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டனர் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் (JSC) ஆதரவுக்கும், ஸம் ஸம் மன்றம், முஸ்லிம் பெண்கள் ஆய்வு மற்றும் செயற்பாட்டு மன்றம் (MWRAF), YMMA இயக்கம் மற்றும் மன்றத்தின் முன்னாள் தலைவர் அஷ்-ஷெய்க் A.L.A.M. ஃபௌஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை அவர் தெரிவித்துள்ளார்.
இவரது மறைந்த தந்தையான அல்ஹாஜ் எம். எச். எம். யெஹியா 35 ஆண்டுகள் காதி நீதிபதியாகப் பணியாற்றியதுடன், அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி இவரும் சேவையாற்றி வருகிறார்.
தந்தை மற்றும் மகன் இணைந்து சமூகத்திற்காகாற்றிய சேவை 48 வருடங்களுக்கும் மேலானது என்பது குறிப்பிடத்தக்கது.
தான் தலைவர் பதவியிலிருந்து மட்டுமே விலகுவதாகவும், காதி முறைமைக்கும் சமூகத்திற்கும் சேவையாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பு தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், இரத்தினபுரி மாவட்ட காதி நீதிபதியாகத் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.